Tuesday, September 27, 2022
Homeஆன்மிகம்திருக்கேதீச்சர திருப்பணிச் சபைக்கு யாழ்.மாநகரசபையின் அதி உயர் விருது வழங்கிக் கெளரவம்(Photos)

திருக்கேதீச்சர திருப்பணிச் சபைக்கு யாழ்.மாநகரசபையின் அதி உயர் விருது வழங்கிக் கெளரவம்(Photos)

யாழ்.மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவினரால் நல்லூர்க் கந்தனின் பெருந்திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 30 ஆவது இதழ் வெளியீட்டு விழாவும், யாழ்.விருது வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2022) காலை-9 மணி முதல் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ்.மாநகர சபையின் ஆணையாளரும், சைவசமய விவகாரக் குழுவின் தலைவருமான இ.த.ஜெயசீலன் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் சைவத்திற்கும், தமிழுக்கும். சமூகத்திற்கும் தொண்டாற்றியவர் களைக் கௌரவித்து வருடா வருடம் வழங்கப்பட்டு வரும் யாழ்.விருது இவ் வருடம் சைவசமய குரவர்களாகப் போற்றப்படும் திருஞானசம்பந்த மூர்த்தி மற்றும் சுந்தர மூர்த்தி நாயன்மார்களால் தேவாரம் பாடிச் சிறப்பிக்கப்பட்டதும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான திருத்தலமான மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத் திருப்பணிச் சபைக்கு வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

இவ்வாலயம் இந்திய அரசின் பெரும் நிதிப் பங்களிப்புடனும், உள்நாட்டு, வெளிநாட்டு அன்பர்கள், நிறுவனங்களின் நிதிப் பங்களிப்புடனும் என 900 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் பாரிய கருங்கல் சிற்பக் கோயிலாகத் திருப்பணி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு அண்மையில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வெகுசிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இந்த வரலாற்றுக் கைங்கரியத்தை ஒருங்கிணைத்துச் சிறப்பாகச் செய்து முடித்தமையைப் பாராட்டிக் கெளரவித்தே திருக்கேதீச்சரம் ஆலயத் திருப்பணிச் சபைக்கு யாழ்.மாநகரசபையின் சைவசமய விவகாரக் குழுவின் அதி உயர் விருதான யாழ்.விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

யாழ்.விருதினை மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வழங்கி வைக்க திருக்கேதீச்சரம் ஆலயத் திருப்பணிச் சபையின் தலைவர் செல்வரத்தினம் இராகவன் மற்றும் திருப்பணிச் சபை நிர்வாகிகள் கலந்து கொண்டு விருதினைச் சம்பிரதாயபூர்வமாகப் பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிக்குப் பேருதவி புரிந்த இந்திய அரசுக்கான சிறப்புப் பாராட்டுக் கெளரவத்தை யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் கலந்து கொண்டு யாழ்.மாநகர முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, யாழ்.விருது வழங்கும் நிகழ்வு இந்த வருடம் 17 ஆவது தடவையாக இடம்பெற்றதுடன் கடந்த-2012 ஆம் ஆண்டு நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய அமுதசுரபி அன்னதான சபைக்கும், இந்த வருடம் திருக்கேதீச்சரம் ஆலயத் திருப்பணிச் சபைக்கும் விசேடமாக வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular