Friday, February 3, 2023
HomeEvents-நிகழ்வுகள்சுன்னாகத்தில் தர்மலிங்கம் எம்பியின் உருவச் சிலை திறந்து வைப்பு

சுன்னாகத்தில் தர்மலிங்கம் எம்பியின் உருவச் சிலை திறந்து வைப்பு

முன்னாள் உடுவில் கிராமசபைத் தலைவரும், முன்னாள் உடுவில் மற்றும் மானிப்பாய்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்.விஸ்வலிங்கம் தர்மலிங்கம் ஞாபகார்த்தமாக யாழ்.சுன்னாகத்தில் அமைந்துள்ள வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தலைமை அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்ட உருவச் சிலை நேற்றுத் திங்கட்கிழமை(23.01.2023) திறந்து வைக்கப்பட்டது.

நேற்றுக் காலை-09.45 மணி முதல் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர். கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் யாழப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உருவச் சிலையை சம்பிராதயபூர்வமாகத் திரைநீக்கம் செய்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவரும், யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரன் தர்சன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், முன்னாள் வடமாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், சுன்னாகம் வாழ்வகத் தலைவர் ஆறுமுகம் ரவீந்திரன், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் உறுப்பினர்கள், புளொட் அமைப்பின் ஆதரவாளர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நினைவு உரைகளை செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன், பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோர் நிகழ்த்தினர்.

மேற்படி உருவச் சிலை வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் கொண்டு வரப்பட்ட ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைவாக விழா ஏற்பாட்டுக் குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டுத் தர்மலிங்கத்தின் குடும்ப உறவுகள் மற்றும் அவரது உள்நாட்டு, புலம்பெயர் நண்பர்களின் நிதிப் பங்களிப்பில் புதிதாக நிறுவப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் துறையின் விரிவுரையாளர் மார்க்கண்டு மனோகரின் கைவண்ணத்தில் குறித்த உருவச் சிலை மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கான சிறப்புக் கெளரவம் நேற்றைய விழா நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular