எதிர்வரும் காலங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாருடன் கலந்துரையாடி யாழ்.நகர வீதிகளில் துவிச்சக்கர வண்டிப் பாவனைக்கான தனியான ஒழுங்கு விதிகளைக் கொண்டு வருவதற்கான வேலைத் திட்டங்களை விரைவில் செயற்படுத்துவோம் என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையேயான சுகநலனில் அக்கறை கொள்ளலில் விழிப்பணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் “யாழ் ஆரோக்கிய நகரம்” எனும் செயற்திட்டத்தின் கீழான “ஆரோக்கியத்தின் பாதையில்” எனும் தலைப்பிலான விழிப்புணர்வு ஈருருளிப் பேரணி இன்று திங்கட்கிழமை(01.8.2022) யாழில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியின் நிறைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
துவிச்சக்கர வண்டிப் பாவனையை நாங்கள் ஊக்குவிக்கின்ற போது யாழ்.நகர வீதிகளில் துவிச்சக்கரவண்டிப் பாவனைக்கு எனத் தனியானதொரு ஒழுங்கை ஏற்படுத்தித் தருமாறும், துவிச்சக்கரவண்டித் தரிப்பிடத்திற்கான இடங்களை ஒதுக்கித் தருமாறும் பல்வேறு தரப்பினருமிடமிருந்தும் யாழ். மாநகரசபையிடம் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றோம். குறிப்பாக இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் பல தரப்புக்களுடனும் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றோம்.
துவிச்சக்கரவண்டித் தரிப்பிடங்களை உருவாக்குவதில் எமக்குப் பிரச்சினைகள் எதுவும் கிடையாது. யாழ்.நகரில் பல்வேறு இடங்களை இதற்காக இனம் கண்டு இவற்றை உருவாக்க முடியும். ஆனால், யாழ்.நகர வீதிகளில் துவிச்சக்கர வண்டிகளில் செல்வோருக்குத் தனியானதொரு ஒழுங்கை ஏற்படுத்துவதில் எமக்கு நெருக்கடிகள் காணப்படுகின்றன.

யாழ்.நகர வீதிகளின் அகலங்கள் போதுமானதாக இல்லாமலிருப்பது எமக்குப் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் வீதிகளை அகலிக்கின்ற போது பல்வேறு நெருக்கடிகளை நாங்கள் எதிர்நோக்க வேண்டும். இருந்த போதிலும் இதனை ஒரு காரணமாகக் கூறிக் கொண்டு இந்த வேலைத் திட்டத்தைப் பின்நகர்த்தக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாகவிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)