Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்தமிழ்மக்கள் உரிமைகளைப் பெற்றுக் கெளரவமாக வாழ இந்தியா உதவ வேண்டும்: யாழ்.மாநகர முதல்வர்(Photos)

தமிழ்மக்கள் உரிமைகளைப் பெற்றுக் கெளரவமாக வாழ இந்தியா உதவ வேண்டும்: யாழ்.மாநகர முதல்வர்(Photos)

இந்தியா தன்னாலான பொருளாதார ரீதியிலான உதவிகளை தமிழ்மக்களுக்காக வழங்கி வருகின்றது. நாங்கள் காலா காலமாக உரிமைக்காகப் போராடி வருகின்றதொரு இனம். எங்கள் இனத்தின் விடுதலைக்காக, கெளரவமான வாழ்வுக்காக, எங்கள் இனத்தின் இருப்பைத் தக்க வைப்பதற்காக இந்தியா உதவ வேண்டும். எங்களின் உரிமைகளைப் பெற்றுக் கெளரவத்துடன் இந்த மண்ணில் வாழ இந்தியா வழி ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்கை என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்.மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 30 ஆவது இதழ் வெளியீட்டு விழாவும், யாழ்.விருது வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2022) காலை-9 மணி முதல் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் தந்தையர் நாடான, தொப்புள் கொடி உறவான இந்தியாவிடம் நாங்கள் மன்றாட்டமாக கேட்டு நிற்கும் கோரிக்கை இதுதான். இந்தியா இதனை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு உறுதுணையாக வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் காலாகாலமாக இருப்பார்கள். தமிழ்மக்கள் ஒருபோதும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என்கின்ற உறுதியையும், உத்தரவாதத்தையும் கூட நாங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு வழங்குகின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் கலந்து கொண்ட நிலையிலேயே அவர் முன்னிலையில் யாழ்.மாநகர முதல்வர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular