சிறப்பிக்கப்பட்ட யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியின் மணி விழாவும் பணிநயப்பு விழாவும்(Photos)

வலிகாமத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியின் மணி விழாவும் பணிநயப்பு விழாவும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(20.5.2022) முற்பகல்-11.45 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் வே.த.ஜெயந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் ஆசிரியர் நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் குறித்த விழாவில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மதியழகன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் கல்வி வலய மனைப் பொருளியல் ஆசிரிய ஆலோசகர் திருமதி.க.மோகனசுந்தரம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார்.

விழாவில் மேற்படி பாடசாலையில் தொடர்ச்சியாக 24 வருடங்கள் மகத்தான ஆசிரியப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள மணிவிழா நாயகி திருமதி.கெளரி மனோகரி சிறீதரன் கல்லூரியின் சார்பாகவும், பழைய மாணவர்கள் சார்பாகவும் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டார். அத்துடன் அவரது உன்னதமான ஆசிரியர் சேவைகளைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் ‘மனோகரம்’ எனும் தலைப்பிலான மணிவிழா மலரும் குறித்த விழாவில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.      

பணி இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்லூரியின் முன்னாள் பிரதித் தலைவர் பா.செந்தூரன், முன்னாள் பகுதித் தலைவர் திருமதி.ஜெ.தர்மபாலன் ஆகியோரும், மேலும் 11 ஆசிரிய, ஆசிரியைகளும் நினைவுச் சின்னம் மற்றும் சிறப்புப் பரிசில் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

பணி இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர் குழாத்தினர் சார்பில் கல்லூரிக்குப் பெறுமதியான பொருளொன்றும் விழாவில் நன்கொடையாக அதிபர் ஜெயந்தனிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் கல்லூரியின் தரம்-6 மாணவிகளின் குழு நடனம், மற்றும் மாணவி செல்வி.ப.சயந்தர்சினியின் பேச்சு ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.      

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)