
ஒரு மீன் விற்கும் தொழிலாளி கூட ஒலி எழுப்பித் தனது விற்பனையைச் சிறப்பாகச் செய்யும் போது இந்தப் பிரதேச சபையால் சைகை ஒலியை எழுப்பி குப்பைகள் அள்ள முடியவில்லை என்பது எங்களுடைய வரவு செலவுத் திட்ட அறிக்கைகளைச் சரியாகச் செயற்படுத்த முடியவில்லை என்பதற்கான தக்க சான்று என நல்லூர் பிரதேச சபையின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் திருமதி- வாசுகி சுதாகர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் பாதீடு தொடர்பான விசேட கூட்டம் கடந்த வியாழக்கிழமை(19) சபை மண்டபத்தில் தவிசாளர் தா. தியாகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சென்ற வருட வரவு செலவுத் திட்டத்தில் நாங்கள் குறிப்பிட்ட பல விடயங்கள் திருத்தப்படவில்லை எனப் பல உறுப்பினர்களின் அங்கலாய்ப்புக்கள் என் காதுகளுக்கு எட்டிய வகையில் அந்த விடயங்கள் திருத்தப்படாத நிலையில் மீண்டுமொரு வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் எப்படி பூர்த்தி செய்யப் போகின்றோம் என்பது என் முதலாவது வினா. கடந்த இரண்டு வருடங்களாகப் பல விடயங்கள் இன்னமும் பூர்த்தி பூர்த்தி செய்யப்படவில்லை.
உதாரணமாக எனது செயற்பாடாக நான் இந்தச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டு வந்தவுடன் சபையில் கொண்டு வந்த கட்டாக்காலி நாய்களுக்கான செயற்பாடு, போதை ஒழிப்புக்கான செயற்பாடு மற்றும் கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் மூன்று வருடங்கள் கடந்தும் இதுவரை தீர்வுகள் காணப்படவில்லை. குறித்த செயற்பாடுகளுக்குத் தீர்வுகள் காணப்படாதது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்மக் கழிவகற்றல் எமது சபையால் சரியாகச் செயற்படுத்தப்படவில்லை. நான் முதல் வருடத்திலேயே எனது பிரேரணையில் குப்பைகளைக் கொண்டு வரும் போது ஒரு சைகை ஒலியை எழுப்பினால் வீடுகளுக்குள்ளிருக்கும் வீட்டுக்காரர் உடனடியாக வெளியே வந்து குப்பைகளை அகற்றுவதற்கான சரியான வழியாகவிருக்கும்.
வீட்டுக்குள்ளிருப்பவர்களுக்குச் சைகை ஒலி கேட்காத காரணத்தால் எப்போது வாகனம் வரும் எனத் தெரியாமல் குப்பைகளை மக்கள் வெளியே கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் குப்பைகள் அதிகமாக வீதிகளில் தேங்கி கிடக்கின்றன. வீதிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் குப்பைகள் நாய்களால் இழுத்துச் செல்லப்படுவதால் அந்த வீதி எங்கும் சிதறடிக்கப்படுகிறது.
இந்த மோசமான நிலைமையை எனது கிராமத்திலேயே பார்த்துக் கொண்டு தான் இன்றைய வரவு செலவுத் திட்டக் கூட்டத்துக்கு வந்துள்ளேன். இங்கிருக்கும் உறுப்பினர்களில் யாராவது திண்மக் கழிவகற்றல் ஓரளவுவாவது சிறப்பாகச் செயற்படுத்தப்படுகிறது எனச் சொல்வார்களா? என்பது என் கேள்வி.
அன்றுமுதல் இன்றுவரை குப்பைகள் கொட்டுவதற்கான சரியான பொறிமுறைகள் உருவாக்கப்படவில்லை.
வட- கிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களில் தற்போது அதிகமாகத் தற்கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறான தற்கொலைகளை நிறுத்துவதற்கு நாங்கள் சில விடயங்களைச் செய்வோம் என என்னால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மூலம் இந்தச் சபையே முடிவெடுத்தது. ஆனால், இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான நிதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் கழிவு வாய்க்கால்கள் பூரணமாகச் செயற்படுத்தப்படவில்லை என்பது பல அங்கத்தவர்களின் குறைபாடாகவுள்ளது. கடந்த மூன்று வருடங்களாகச் செயற்படுத்தப்படாத இந்த விடயத்தை ஒருவருடத்திற்குள் நாங்கள் எப்படிப் பூர்த்தி செய்து மக்கள் மத்தியில் நற்பெயருடன் வெளியேறப் போகின்றோம்? என்ற மிகப் பெரிய வினா என் மனதிலிருக்கிறது.
நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். மக்களுக்குச் சில அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக சபைக்கு வந்தவர்கள். ஆனால், இந்த விடயங்கள் எதுவும் சீராகச் செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை, வேறு பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் அவர் முன்வைத்தார்.
{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ. ரவிசாந்}