Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்எரிபொருள் நெருக்கடி யாழ்.மாநகரசபைக் கழிவு அகற்றலிலும் தாக்கம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு(Photo)

எரிபொருள் நெருக்கடி யாழ்.மாநகரசபைக் கழிவு அகற்றலிலும் தாக்கம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு(Photo)

நாட்டில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாகத் யாழ்.மாநகரசபைக்குள் தற்போது ஒன்பது உழவு இயந்திரங்களை மாத்திரம் கொண்டு இந்தக் கழிவு அகற்றலை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் எனச் சுட்டிக் காட்டியுள்ள யாழ்.மாநகரசபையின் சுகாதாரக் குழுத் தலைவர் வரதராஜன் பார்த்திபன் கழிவகற்றலுக்காகப் பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.மாநகரசபையில் இன்று வியாழக்கிழமை(30.6.2022) பிற்பகல்-3 மணிக்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த-2021 ஆம் ஆண்டு ஜீன் மாதம் யாழ்.மாநகர சபையின் முதல்வராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் பொறுப்பேற்றதன் பின்னர் யாழ்.மாநகரசபையின் 27 வட்டாரங்களிலும் 27 உழவு இயந்திரங்கள் மூலம் கழிவகற்றலை மிகச் சிறப்பாகச் செய்திருந்தோம். இதுதொடர்பில் பல்வேறுபட்ட பாராட்டுதல்களும் கிடைத்திருந்தன.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திண்மக் கழிவகற்றலில் ஈடுபடும் உழவு இயந்திரங்களின் எண்ணிக்கை 27 இலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது. இதன்பின் நாட்டில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாகத் தற்போது ஒன்பது உழவு இயந்திரங்களை மாத்திரம் கொண்டு இந்தக் கழிவு அகற்றலை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இருந்தபோதிலும் நாங்கள் இயலுமானவரை எங்கள் மக்களுக்கு வினைத் திறனான கழிவு அகற்றல் சேவையை வழங்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.

யாழ்.மாநகர முதல்வரின் உத்தரவுக்கு அமையத் தற்போதைய சூழலில் வாரத்தில் ஒரு தடவையேனும் ஒவ்வொரு வீடுகளுக்கும் கழிவகற்றலுக்காகச் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் நேர அட்டவணை தயாரிக்கப்பட்டு எங்கள் மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், நாட்டில் ஏற்படவுள்ள மிகவும் இறுக்கமான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்தக் கழிவகற்றலில் சில தடங்கல்கள் ஏற்படலாம்.

தற்போதைய நிலையில் நாம் திட்டமிட்டவாறு கழிவகற்றல் செயற்பாடுகள் இடம்பெற முடியாத சூழல் ஏற்படுமாயின் யாழ்.மாநகரசபையின் உப அலுவலகங்களான ஒன்பது இடங்களிற்கும் பொதுமக்கள் ஏதாவது ஒரு வகையில் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளைக் கொண்டு சென்று சேர்க்க முடியும். இன்னும் ஓரிரு நாட்களில் யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் மூலமாக இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும். இந்த உப அலுவலகங்களில் காலை-6 மணி முதல் மாலை-6 மணி வரை எங்கள் பணியாளர்கள் மக்களுக்காக கடமையாற்றுவார்கள்.

யாழ்.மாநகரசபை முன்னெடுக்கும் இந்த இடர்காலக் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்கள் 0716390000 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படம் செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular