Thursday, December 1, 2022
Homeஆன்மிகம்வெகுசிறப்பாக இடம்பெற்ற யாழ்ப்பாணம் வண்ணை வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேர்த் திருவிழா(Photos)

வெகுசிறப்பாக இடம்பெற்ற யாழ்ப்பாணம் வண்ணை வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேர்த் திருவிழா(Photos)

ஈழத்துத் திருப்பதி எனப் போற்றப்படும் வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(04.10.2022) காலை மிகவும் பக்திபூர்வமாகவும், வெகுசிறப்பாகவும் நடைபெற்றது.

கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வேங்கடேச வரதராஜப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கும் அதிகாலை விசேட அபிஷேக, பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

காலை-6.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதரராக வண்ணை வெங்கடேச வரதராஜப் பெருமாள் அலங்கார நாயகனாக உள்வீதி வலம் வந்து சித்திரத் தேரில் ஆரோகணம் செய்தார்.

அடியவர்களால் சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து விசேட தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க சித்திரத் தேர் பவனி ஆரம்பமானது. ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் சித்திரத் தேரின் வடம் தொட்டிழுத்தனர்.

இவ்வாலயத் தேர்த் திருவிழாவில் யாழ். குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர்.

சித்திரத் தேர் வீதி உலா இடம்பெற்ற போது அடியவர்கள் பஜனை பாடியும், பெருமாளின் பல்வேறு நாமங்கள் உச்சரித்தும் பக்தியுடன் துதி செய்தனர்.

இதேவேளை, இவ் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த-26 ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் விஜயதசமி நன்னாளான நேற்றுப் புதன்கிழமை(05.10.2022) காலை-9 மணியளவில் தீர்த்தோற்சவமும், மாலை-6 மணிக்குக் கொடியிறக்க உற்சவமும் சிறப்பாக நடந்தேறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular