Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு தமிழ்மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!(Photo)

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு தமிழ்மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!(Photo)

எதிர்வரும்-25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உண்ணா நோன்பு இருந்து எங்களுடைய வீர வணக்கத்தையும், அஞ்சலியையும் தியாக தீபம் திலீபனுக்கு அனைத்துத் தமிழ் உறவுகளும் செலுத்த வேண்டும் எனத் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்புக்கும், அரசியல் கட்சிகளுடைய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை(22.9.2022) பிற்பகல் யாழில் இடம்பெற்றது.

இதன் பின்னர் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர் கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி மேற்கண்ட கோரிக்கையை விடுத்தனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்படி நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பைச் சேர்ந்ததவத்திரு.வேலன் சுவாமிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

சுயாதீனமாக உருவாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு சுயாதீனமாகவும், வெளிப்படுத்தன்மையோடும் இயங்கி வருகின்றது. எங்களை யாரும் அணுகித் தங்களுடைய ஆலோசனைகள், கருத்துக்களை முன்வைக்கலாம்.

இதன் அடிப்படையில் தமிழ்த்தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுடைய தலைவர்கள், பிரதிநிதிகள் உடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சில தீர்மானங்கள் எட்டப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர்-25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-8 மணியிலிருந்து மாலை- 5 மணி வரை உண்ணாநோன்பு இருந்து எங்களுடைய வீர வணக்கத்தையும், அஞ்சலியையும் தியாகதீபம் திலீபனுக்கு அனைத்துத் தமிழ் உறவுகளும் செலுத்த வேண்டும்.

தியாக தீபம் திலீபன் இன்னுயிரை ஈந்த இந்த நல்லூர் பூமியிலே அவருடைய நினைவாலயம் அமைந்திருக்கின்ற இடத்திலே உண்ணாவிரதம் நடைபெற இருக்கின்றது.

எந்தக் கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்தாரோ, பார்த்தீபன் இன்னமும் பசியோடு தான் இருக்கின்றார் என்ற வாக்கியத்துக்கமைய இன்றும் அதே பிரச்சினைகளை ஒவ்வொரு வடிவங்களிலே எதிர்கொண்டிருக்கின்றோம். அவற்றுக்கான நிரந்தரத் தீர்வு வேண்டியும், ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டியும் உண்ணா நோன்பை இருக்கத் தீர்மானித்திருக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தில் பெருமளவானோர் பங்குபற்ற வேண்டும் என இந்தச் சந்தர்ப்பத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற வாக்கியத்துக்கு அமைய மக்களுடைய புரட்சி எழுச்சியாக அமைய வேண்டும்.

தியாக தீபம் திலீபனுடைய நினைவு நாளான செப்டம்பர்–26 ஆம் திகதி தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த முற்பகல்-10.48 மணிக்கு மலரஞ்சலி இடம்பெறவிருக்கின்றது.

தமிழ்த்தேசியப் பரப்பில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், மாதர் சங்கங்கள், முச்சக்கர வண்டிச் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், விவசாய அமைப்புக்கள், பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், கிராம அபிவிருத்தி நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் அமைப்புக்கள் என அனைத்து மக்களும் இவற்றை ஒழுங்கு செய்து ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதத்திலும் அதே போன்று திங்கட்கிழமை நடைபெறும் நினைவேந்தல்களிலும் பங்குபற்றி மக்கள் எழுச்சியைக் காட்ட வேண்டும். அனைத்து அமைப்புக்களையும் இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular