Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்நல்லூரில் தியாகதீபம் திலீபனின் இறுதிநாளில் உண்மையில் நடந்தது என்ன?(Photos)

நல்லூரில் தியாகதீபம் திலீபனின் இறுதிநாளில் உண்மையில் நடந்தது என்ன?(Photos)

தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை(26.9.2022) நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவுத் தூபியடியில் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

திலீபனின் உயிர்பிரிந்த நேரமான முற்பகல்-10.48 மணியளவில் நினைவுத் தூபிக்கு முன்பாக இரண்டு கைகளையும் இழந்தவரும், கண் பார்வை அற்றவருமான முன்னாள் போராளி சவரிமுத்து கிட்லர் மரியநாயகம் பொதுச் சுடரேற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் போராளிகள் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்ததைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு உணர்வுபூர்வ மலர் அஞ்சலி செலுத்தினர்.

கைதடிப் பகுதியிலிருந்தும் முன்னாள் போராளி ஒருவரும், அவரது மகனும் பறவைக் காவடி எடுத்து வந்து தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பொதுச் சுடர் ஏற்றப்படுவதற்குத் தயாரான நிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் பறவைக்காவடி திலீபன் நினைவுத் தூபியடிக்கு வந்தமையாலும், பறவைக்காவடிக்கு முன்பாக நடந்து வந்த ஒருவர் செருப்பு அணிந்து வந்தமையாலும் அப்பகுதியில் பெரும் குழப்பமும் அதனைத் தொடர்ந்து தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டுப் பின்னர் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் ஆரம்பமாகி இடம்பெற்றது.

குறித்த சந்தர்ப்பத்தில் பறவைக் காவடியை அப்பகுதியில் இறக்குவதற்குத் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அனுமதிக்காத நிலையில் கடும் வாக்குவாதமும் முறுகல் நிலையும் ஏற்பட்டது.

பறவைக்காவடியின் வருகையுடன் அண்மையில் உருவாக்கப்பட்ட தியாகதீபம் திலீபன் பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த தவத்திரு. வேலன் சுவாமிகள் உள்ளிட்ட குறித்த குழுவைச் சேர்ந்தவர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தமை முறுகல் நிலைமையை மேலும் தீவிரமாக்கியிருந்தது. எனினும், வேலன் சுவாமிகளை அங்கிருந்து வெளியேறுமாறு பலரும் கூச்சலிட்டமையால் அவர் அங்கிருந்து வெளியேறி அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையில் சென்று அமர்ந்து கொண்டார்.

பொதுச்சுடரினை அப்புறப்படுத்துவதற்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் முயன்ற போது அதனைத் தடுக்க முற்பட்ட நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர் உடலின் பல பகுதிகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. இதன்பின்னரே பறவைக்காவடி திலீபன் நினைவுத் தூபி முன்பாக இறக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அம்புலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டுத் தீக்காயங்களுக்கு உள்ளானவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- எஸ்.ரவி)

RELATED ARTICLES

Most Popular