Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்நல்லூரில் பதினொராவது நாளாகவும் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி(Photos)

நல்லூரில் பதினொராவது நாளாகவும் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி(Photos)

பன்னிரண்டு தினங்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உன்னத இலட்சியத்திற்காய் உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினொராம் நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (25.9.2022) காலை-8 மணிக்கு யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவுத் தூபியடியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கிருபா கிரிதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் இரண்டு கைகளையும் இழந்தவரும், கண் பார்வை அற்றவருமான முன்னாள் போராளி சவரிமுத்து கிட்லர் மரியநாயகம் ஈகைச் சுடரேற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உன்னத இலட்சியத்திற்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கும், கடந்தகால விடுதலைப் போராட்டத்தின் போது உயிர்நீத்த அனைத்து மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து தியாகதீபம் திலீபனுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் போராளிகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் குழுவினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகையில் பதினொராவது நாளாகவும் திலீபனின் நினைவுகளைச் சுமந்து இன்று காலை-8 மணி முதல் மாலை-5 மணி வரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular