Sunday, February 5, 2023
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்நல்லூரில் பத்தாவது நாளாகவும் திலீபனுக்கு அஞ்சலி: அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுப்பு(Photos)

நல்லூரில் பத்தாவது நாளாகவும் திலீபனுக்கு அஞ்சலி: அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுப்பு(Photos)

பன்னிரண்டு தினங்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உன்னத இலட்சியத்திற்காய் உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பத்தாம் நாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை(24.9.2022) காலை-8 மணிக்கு யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவுத் தூபியடியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாவீரர்களான 2 ஆம் லெப்டினன் குயிலன் மற்றும் லெப்டினன் உமா ஆகியோரின் சகோதரர் துரைராசா இராஜரூபன் ஈகைச் சுடரேற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உன்னத இலட்சியத்திற்காக தன் இன்னுயிரை ஈந்த தியாக தீபம் திலீபனுக்கும், கடந்தகால விடுதலைப் போராட்டத்தின் போது உயிர்நீத்த அனைத்து மாவீரர்களுக்கும், கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேற்படி அஞ்சலி நிகழ்வில் சிறுவர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகையில் பத்தாவது நாளாகவும் திலீபனின் நினைவுகளைச் சுமந்து காலை-8 மணி முதல் மாலை-5 மணி வரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular