முழுக்க முழுக்கச் சைவர்கள் வழிபட்டு, சைவர்கள் திருப்பணி செய்து, சைவர்களே பராமரித்த திருக்கோயிலே திருகோணேச்சரம். பூமிப் பந்தில் வாழ்கின்ற 120 கோடி இந்துக்களுக்கு உரித்தான கோயில் திருக்கோணேச்சரம் எனத் தெரிவித்துள்ள இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவரும், சிறந்த தமிழ்ப் புலமையாளருமான மறவன்புலவு க.சச்சிதானந்தன் திருக்கோணேச்சரத்தைக் காப்பாற்றுகின்ற பெரும் முயற்சியில் மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா ஈடுபட்டுள்ளார். அவர் வழிகளைக் கண்டுபிடித்துக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை சிவ சேனைத் தொண்டர்களுக்கு உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவாரப் பாடல் பெற்ற ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டிருந்தார். அத்துடன் இதுதொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் இது தொடர்பில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை(13.9.2022) செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருக்கோணேச்சரத்தைக் காப்பதற்குத் தந்தை செல்வா தலைமையில் மாண்புமிகு அமைச்சர் திருச்செல்வம் எடுத்த முயற்சிகள் தோற்றுப் போக அதற்காக அவர் அமைச்சர் பதவியில் இருந்தே விலகினார் 1968 இல்.
மன்னர் காலத்துக்குப் பின்பு ஆட்சி அரசியல்வாதியாகத் திருக்கோணேச்சரத்தில் தம் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகியவர் மு. திருச்செல்வம். எனக்கு அவரே அரசியல் குரு. நீலன் திருச்செல்வத்தின் தந்தையார் அவர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருக்கோணேச்சரத்தைக் காப்பதற்கு முயற்சி எடுக்கும் ஆட்சிநிலை அரசியல்வாதி. இடையில் அமைச்சர் நிலையில் உள்ள வேறு எவராவது முயற்சி எடுத்தாரா? என்பதற்கு என்னிடம் சான்று இல்லை.
அமைச்சர் திருச்செல்வத்துக்கு இல்லாத வலிமையும், திறமையும் திருக்கோணச்சரத்தைக் காப்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உள்ளது.
தேவானந்தாவின் பெரியப்பா கே.சி.நித்யானந்தாவும் நானுமாகத் திருக்கோணேச்சரத்தை எவ்வாறு காக்கலாம் எனப் பலருடன் பேசி இருக்கிறோம். பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். எதிலும் வெற்றி பெற முடியவில்லை.
மாண்புமிகு அமைச்சரின் முயற்சியைப் பாராட்டுகிறேன். முதல் நிலைத் தடைகளைத் தாண்டி உள்ளார். அடுத்த நிலைத் தடைகளையும் தாண்டுவார்.
இராவணன் வழிபட்ட திருக்கோயில். இராமர் வழிபட்ட திருக்கோயில். இராமாயண கால திருக்கோயில். பூமிப் பந்தில் இன்று வாழ்கின்ற 120 கோடி இந்துக்களுக்கு உரிமைக் கோயில்.
தமிழகத்தின் சேர சோழ பாண்டிய மன்னர்கள், தமிழகத்து சிவனடியார்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் திருகோணேச்சரம் வந்து வழிபட்டனர். தமது இலச்சினைகளையும், முத்திரைகளையும் கல்வெட்டாக்கிச் சென்றுள்ளனர்.
நிரைகழல் அரவம் எனத் தொடங்கும் திருப்பதிகம் சுந்தரர் பாடியது. அவருக்குப் பின் அருணகிரிநாதர் பாடி உள்ளார்.
ஈழத்துச் சிவனடியார்கள், அறிஞர்கள், கவிஞர்கள் பலர் திருக்கோணேச்சரத்தைப் பாடியுள்ளனர்.
சாத்தான் கோயில் என்று கூறித் திருகோணச்சரத்தை வரலாற்றில் முதல்முறையாக இடித்தவர்கள், தரைமட்டமாக்கியவர்கள் அக்கோயிலின் கருங்கற்களைக் கொண்டு கோட்டை கட்டியவர்கள் கத்தோலிக்கர்.
இந்த வரலாற்றுப் பின்னணியில் திருக்கோணேச்சரத்தைக் காப்பாற்றுகின்ற பெரும் முயற்சியில் மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா ஈடுபட்டுள்ளார். தேவானந்தாவால் முடியும். மேதை கே. சி. நித்யானந்தா வழி வழிச் சைவ அடியவர் அல்லவா?
தேவானந்தா வழிகளைக் கண்டுபிடித்துக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை சிவ சேனைத் தொண்டர்களுக்கு உண்டு. அவரின் திறமை, ஆற்றல், செயல்வேகம் யாவிலும் நம்பிக்கை சிவசேனையில் உள்ளவர்களுக்கு உண்டு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)