நாயன்மார்களால் தேவாரப் பாடல் பாடப் பெற்ற திருத்தலமும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான திருக்கோணேச்சரர் ஆலயத்திற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கலாச்சார பௌத்த சாசன மதவிவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை(11.10.2022) காலை விஜயமொன்றை மேற்கொண்டனர்.
மேற்படி ஆலயத்தில் ஆலய நிர்வாக சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூசை வழிபாடுகளிலும் அவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கு திருகோணேஸ்வரர் ஆலயத்தின் புராதான பெருமைகள் தொடர்பாக மேற்படி ஆலய நிர்வாக சபையினரால் எடுத்துரைக்கப்பட்டது.
திருக்கோணேச்சரர் ஆலயத்தின் புனிதத் தன்மைக்குப் பாதகம் ஏற்படும் வகையில் சுற்றுச் சூழலில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பில் ஆராயும் நோக்கிலேயே மேற்படி விஜயம் அமைந்துள்ளது.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியாகவும் திருக்கோணேச்சரர் ஆலயத்தின் நிர்வாக சபையினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்நிலையில் திருக்கோணேச்சரர் ஆலயத்தின் புனிதத் தன்மைக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள வியாபார நிலையங்களைப் பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)