சரித்திரப் பிரசித்திபெற்ற திருக்கேதீச்சர ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும் என அகில இலங்கை இந்துமாமன்ற உபதலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளரும், திருக்கேதீச்சர திருப்பணிச் சபையின் உபதலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மின் அஞ்சல் மூலமாக அவர் நேற்றுப் புதன்கிழமை(22.6.2022) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சைவசமய ஆலய அறங்காவலர்கள், சைவசமய நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், அடியவர்கள் திரளாகச் சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கியநாள் எதிர்வரும்- 04.7.2022 முதல் 06.7.2022 வரை. எனவே, இத் திருநாளில் இலங்கையின் பல பாகங்களிருந்தும் சைவமக்கள் மன்னார் திருக்கேதீச்சரம் செல்ல வேண்டியிருப்பதால் பிரதம மந்திரியும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் விசேட போக்குவரத்து ஒழுங்குகளைச் செய்ய முன்வர வேண்டும்.
தனிப்பட்ட ரீதியில் மக்கள் செல்வதற்கு எரிபொருள் பற்றாக்குறை பெரும் பாதிப்பாக இருப்பதனால் சைவமக்கள் பல வருடங்களாக காத்திருந்த திருக்கேதீச்சர மகா கும்பாபிஷேகத்தைத் தரிசிப்பதற்குத் தக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
இலங்கை- இந்திய அரசின் ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அரசால் சுமார்-350 மில்லியனுக்கு மேல் செலவு செய்து முற்றாக கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள ஆலயத்தைக் கண்ணால் கண்டு தரிசிப்பதற்கு இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பலர் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் இருந்து பலாலி நோக்கி வரவுள்ள விமான சேவை குறிப்பாகத் திருக்கேதீச்சர ஆலயத்தை அடிப்படையாக வைத்து ஜீலை முதல்வாரம் ஆரம்பிக்கப்படவிருப்பது அனைவரும் அறிந்ததே. எனவே, இவ்விடயம் தொடர்பாகப் பிரதமரும், போக்குவரத்து அமைச்சரும், தமிழ் அரசியல்வாதிகளும் மிகுந்த அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சைவத்தமிழ் மக்கள் சார்பில் இந்த அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
(செ.ரவிசாந்)