Friday, February 3, 2023
HomeUncategorisedயாழ்.தீவகத்தில் மாவீரர்களுக்கு பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி

யாழ்.தீவகத்தில் மாவீரர்களுக்கு பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி

யாழ்.தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் தீவகம் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் மாவீரர் வார இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(27.11.2022) மாலை-06.05 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

மாவீரர்களை நினைவேந்திப் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. சமநேரத்தில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவுகள் உள்ளிட்டோர் ஈகைச் சுடரேற்றித் தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் முன்னாள் போராளிகள், மதக் குருமார்கள், தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இதன்போது தமிழ்மக்களின் விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய உறவுகளை நினைந்து சக உறவுகள் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி காணும் கண்கள் அனைத்தையும் கலங்க வைத்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயன்தரு தென்னங் கன்றுகள் தீவகம் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் கடந்த கால யுத்தத்திற்குப் பின்னர் 2017 ஆம் ஆண்டு மாவீரர் நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2018,2019 ஆம் ஆண்டுகளில் மாவீரர் வார இறுதிநாள் நிகழ்வுகள் மேற்படி துயிலுமில்லத்தில் பல நூற்றுக்கணக்கானோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தது. 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மாவீரர் வார இறுதிநாள் நிகழ்வுகளை இங்கு நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular