6 குழந்தைகளின் தாயின் மோசமான செயல்

காதலுக்கு வயதைத் தவிர கண்ணில்லை என்று கூறும் சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டம் ஃபதேபுரா தாலுகாவில் உள்ள சக்ரபாடா கிராமத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் காந்திநகரில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். திருமணமாகி கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் காந்தி நகரில் தன்னுடன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த அம்லிகேதா கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனை திருமணமான அப்பெண் காதலித்து வந்துள்ளார். இருவரின் காதலும் வளர்ந்த நிலையில், சிறுவனுடனே சென்றுவிடுவது என தீர்மானித்த அப்பெண், தனது கணவர், 6 குழந்தைகளை நிர்கதியாக்கிவிட்டு சிறுவனுடன் சென்று தலைமறைவாகினார்.

இதனிடையே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் 14 வயதாகும் தன் மகனை அப்பெண் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார். தனது மகன் 2007-ல் பிறந்தான், அவனுக்கு 14 வயது தான் ஆகிறது என அவனின் தந்தை ஆதார் அட்டையை ஆதாரமாகக் காட்டி தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் போலீசாரின் விசாரணையின்படி தந்தைக்கும் மகனுக்குமான தொலைபேசி உரையாடலின்படி சிறுவன் தான் 1997-ல் பிறந்தவன், எனக்கு சட்டப்படியான வயது இருப்பதாக தெரிவித்திருக்கிறான். எனவே குழப்பமடைந்துள்ள போலீசார் தந்தையிடம் சிறுவனின் பிறப்பு சான்றிதழை கொண்டுவரும்படி தெரிவித்திருக்கின்றனர். சிறுவனுக்கு மைனர் வயது என்பது உறுதியானால் மட்டுமே போஸ்கோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஷெலாட் கூறுகையில், சிறுவன் மற்றும் பெண் என இருதரப்பினருமே உண்மையை மறைக்கிறார்கள். இரு குடும்பத்தினரும் பணத்தை அடிப்படையாக கொண்டு விஷயத்தை தீர்க்க நினைத்து அது தோல்வியில் முடிந்ததால் தான் காவல்நிலையத்துக்கு வந்துள்ளனர். இப்பகுதியில் வீட்டை விட்டு செல்லும் குடும்பத்தினர் பணத்தை அடிப்படையாகக் கொண்டு தான் விஷயங்களை தங்களுக்குள் தீர்த்துக் கொள்வார்கள். தப்பிச் சென்ற இருவரையும் இரு குடும்பத்தினரும் ஒரு சத்ராம்பூர் எனும் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இருவரும் அங்கிருந்து தப்பியிருப்பதாக ஷெலாட் தெரிவித்தார்.