ஒமைக்ரான் வைரசின் உருமாற்றம் அதி வேகமாக பரவும்!

ஒமைக்ரான் வைரசின் பிஏ.2 உருமாற்றம் அதன் முந்தைய மரபணு மாற்றமான பிஏ.1ஐ விட அதி வேகமாக பரவும் மற்றும் தீவிர நோய் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது என்று ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகளவில் மிகப் பெரிய நோய் தாக்கத்தை ஏற்டுத்திய கொரோனா, டெல்டா வகை வைரசின் தொடர்ச்சியாக, ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இந்த ஒமைக்ரான் வைரசின் உருமாற்றமான பிஏ.2, கடந்த பிப்ரவரியில் டென்மார்க், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒமைக்ரானில் இதுவரை 53 உருமாற்ற வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருந்தாலும், அவற்றில் பிஏ.1, பிஏ.2 மற்றும் பிஏ.3 ஆகியவை முக்கியமானவை.

இந்நிலையில், பிஏ.2 மிக வேகமாக பரவக் கூடியதாக இருந்தாலும் இதனால் அதிக பாதிப்பு இருக்காது என்று உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் தெரிவித்தது. ஆனால், ஜப்பான் ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு, இதை பொய் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.

இது குறித்து, டோக்கியோ பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கூறுகையில், “ஒமைக்ரான் வைரசின் மரபணு மாறுபாடுகளில் மற்ற அனைத்தையும் விட பிஏ.2 அதி வேகமாக பரவக் கூடியவை. இதற்கென தனித் தோற்றம் எதுவும் இல்லை.

மேலும், பிஏ.2 வகை ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரசை விட வீரியமானது. அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. முதலில் பரவிய வைரஸ்களை போல், தீவிர நோயை ஏற்படுத்தும். நுரையீரலை அதிகம் பாதிக்கும்.

இந்த வைரஸ் தடுப்பூசி எதிர்ப்பு சக்தியையும் மீறி உடலை தாக்க வல்லது. மேலும், எதிர்காலத்தில் இந்த வைரசால் உலக மக்கள் பெருமளவில் பாதிப்பை சந்திப்பதற்கும் வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளனர்.