பணத்திற்காக அரச வைத்தியரின் மோசமான செயல்

மடத்துக்குளம் கரதொழுவைச் சேர்ந்த மருதமுத்து, 33; அவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ராஜராஜேஸ்வரி, 24. கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்த நிலையில்
கடந்த மாதம் 23ம் தேதி, திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.உடுமலை அரசு மருத்துவமனையில், வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதால் ராஜராஜேஷ்வரிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் இவரை பரிசோதித்த அரசு பெண் மருத்துவர் ஜோதிமணி இறந்த குழந்தை தானாகவே வெளியேறிவிடும் என நான்கு நாட்களாக எந்த வித சிகிச்சையும் அளிக்காமல் உறவினர்கள் கேள்விகளுக்கும் பதிலளிக்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இழந்த நிலையில் அந்த அரசு மருத்துவர் தனியார் மருத்துவமனை ஒன்றை பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ராஜராஜேஷ்வரியை உறவினர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்றதும், 35 ஆயிரம் பணம் செலுத்த கூறி உள்ளனர். பணத்தை செலுத்திய ஒரு மணி நேரத்திற்குள் வயிற்றில் இறந்த நிலையில் இருந்த பெண் சிசுவை வெளியே எடுத்தனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காத அரசு மருத்துவரான ஜோதிமணியே, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதனால் அதிர்ந்து போன பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கேட்டபோது அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு சென்ற தஙக்ளுக்கு முறையான சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதனையடுத்து முதல்கட்டமாக, சம்பந்தப்பட்ட டாக்டர் தாராபுரம் மருத்துவமனைக்கு இட மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கோட்டாட்சியரின் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.