Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்மாபெரும் எழுச்சியுடன் நல்லூரில் நாளை திலீபன் நினைவேந்தல்: அனைத்து தமிழ் உறவுகளுக்கும் அழைப்பு(Photo)

மாபெரும் எழுச்சியுடன் நல்லூரில் நாளை திலீபன் நினைவேந்தல்: அனைத்து தமிழ் உறவுகளுக்கும் அழைப்பு(Photo)

தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை(26.9.2022) இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு மாபெரும் எழுச்சியாக இடம்பெற உள்ளது. எனவே, எங்கள் உறவுகள் அனைவரும் நாளை காலை-10 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவாலயத்திற்கு வருகை தந்து உங்கள் அஞ்சலிகளையும், வணக்கங்களையும் செலுத்திக் கொள்ளுமாறும் அன்புரிமையுடன் பொதுக் கட்டமைப்புச் சார்பில் வேண்டி நிற்கின்றோம் எனத் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த தவத்திரு. வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை(25.9.2022) மாலை-6 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் திலீபனின் இறுதிநாள் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளை காலை-8.30 மணி முதல் நண்பகல்-12 மணி வரை நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவாலயம் அமைந்துள்ள யாழ்.பருத்தித்துறை வீதி மூடப்பட்டிருக்கும்.

நாளை காலை-8 மணியளவில் தியாகதீபம் திலீபன் பிறந்த இல்லமான ஊரெழுவிலிருந்து திலீபனின் ஊர்திப் பவனி ஆரம்பித்து நல்லூரை வந்தடைய உள்ளது. சரியாக முற்பகல்-10.48 மணியளவில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுச் சுடரேற்றல், அக வணக்கம், மலர்மாலை அணிவித்தல், மலர் அஞ்சலி செலுத்தல் ஆகிய நிகழ்வுகளுடன் இடம்பெறும்.

எனவே, அனைத்துத் தமிழ் உறவுகளும் தவறாது வருகை தந்து அஞ்சலி செலுத்தி ஒரு எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். மக்கள் புரட்டசியை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் அனைவரும் திலீபன் நினைவேந்தலைப் பெரு எழுச்சியாக முன்னெடுக்க வேண்டும்.

நாளை காலையிலிருந்து நண்பகல்-12 மணி வரை யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் அனைவரும் நினைவாலயத்திற்கு வருகை தந்து கலந்து கொள்வதற்கு வணிகர் கழகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.

யாழ்.மாவட்டத்தின் எந்தப் பகுதிகளிலிருந்தும் தமிழ் உறவுகள் நல்லூரில் இடம்பெறும் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அவர்களை இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் யாழ்.மாவட்டத் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினரிடமும் அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.

அத்துடன் தியாகதீபம் திலீபன் நினைவேந்தலின் இறுதிநாளில் உங்களுடைய பேருந்துகளிலும், வாகனங்களிலும் தியாகதீபம் திலீபனின் எழுச்சிப் பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். அவ்வாறு ஒலிபரப்பும் போது எங்கள் மக்கள் அனைவரும் தியாகதீபம் திலீபனின் உண்ணா நோன்பின் மகத்துவத்தையும், அந்த நோக்கத்தையும் நோக்கத்தையும் உணர்வார்கள். மக்கள் புரட்சி வெடிக்கட்டும்…சுதந்திர தமிழீழம் மலரட்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular