Tuesday, September 27, 2022
Homeஆன்மிகம்தெல்லிநகர் துர்க்கைத் தாயின் பெருவிழா கொடியிறக்க உற்சவத்துடன் இனிதாக நிறைவு(Photos)

தெல்லிநகர் துர்க்கைத் தாயின் பெருவிழா கொடியிறக்க உற்சவத்துடன் இனிதாக நிறைவு(Photos)

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் கொடியிறக்க உற்சவம் நேற்று வியாழக்கிழமை(08.9.2022) மாலை சிறப்பாக நடைபெற்றது.

நேற்று மாலை-4 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து திரு ஊஞ்சற்பாட்டுப் பாடப்பட்டுத் திரு ஊஞ்சலும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள், விநாயகப் பெருமான், முருகப் பெருமான் ஆகிய தெய்வங்கள் எழுந்தருளிக் கொடித் தம்பத்தடியை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு கொடித்தம்பப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷங்களுக்கு மத்தியில் மாலை-6 மணியளவில் கொடியிறக்க உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் மஹோற்சவப் பெருவிழா சிறப்பாக நிறைவேற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து உரையாற்றினார். தொடர்ந்து ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ செந்தில்ராஜக் குருக்கள் வாழ்த்தரிசி இட்டு ஆசிர்வதிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து துர்க்கை அம்பாள் சிங்க வாகனத்தில் வெள்ளை, சிவப்புப் பட்டாடையுடன் சர்வ மங்கள ஆபரணங்களுடன் சிங்க வாகனத்தில் அருட்காட்சி கொடுக்க ஏனைய தெய்வங்களும் தமக்கே உரிய வாகனங்களில் வெளிவீதியில் எழிலுற வீதி உலா வந்தனர். தொடர்ந்து உள்வீதி உலாவும் இடம்பெற்றது.

இதன்போது வேத மந்திர உச்சாடனம், திருமுறை ஓதுதல், சங்கு, சேமக்கலம், நாதஸ்வரம், தவில் ஆகிய வாத்திய முழக்கங்கள் என்பன இடம்பெற்றுத் தொடர்ந்து மெளன உற்சவமும் இறுதியாகச் சகல வாத்திய முழக்கங்கள் இடம்பெற்று முத் தெய்வங்களும் இருப்பிடம் சென்றடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து சண்டேஸ்வரர் வெளிவீதியும் பின்னர் உள்வீதியும் வலம் வந்து இறுதியாக ஆச்சாரிய உற்சவத்துடன் கொடியிறக்க உற்சவம் இனிதாக நிறைவுற்றது.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular