பாரிய விளைவுக்கு தமிழ் மக்கள் முகம்கொடுக்க வேண்டிவரும்!

இலங்கை ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் செயலணி உருவாக்கப்பட்டதன் மூலம் பாரிய விளைவுக்கு தமிழ் மக்கள் முகம்கொடுக்க வேண்டிவரும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள சட்டங்களை அமுல்படுத்தினாலேயே போதுமானது. இருக்கின்ற சட்டங்களை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதே இந்த நிலைப்பாடாகும் என்றார்.

ஜனாதிபதிக்கு வேண்டப்பட்டவர்கள், தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு ஒரு சட்டமும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமும் என்ற நிலைப்பாடில் இல்லாமல் ஒரு சட்டத்தினை அமுல்படுத்துங்கள் என்றே நாங்கள் கூறியிருந்தோம்.

அதனைவிடுத்து புதிதாக ”ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற செயணியை உருவாக்குவதன் மூலம் இலங்கை நாட்டின் சட்டத்தினை மதிக்காத ஒருவரை ஜனாதிபதியாக கொண்டுவந்துள்ளனர்.

இந்த ஒரேநாடு- ஒரேசட்டம் என்ற ​ஜனாதிபதி செயலணிக்கு எதிரான எங்களது கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதனூடாக தமிழ் பேசும் மக்கள் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளுக்கு முகம்கொடுக்கும் நிலை உருவாகும். இன்று மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடிவருகின்ற நிலைகாணப்படுகின்றது. இன்னும் இரண்டு வருடத்தில் இந்த நாட்டில் பசியினால் மக்கள் உயிரிழக்கும் நிலையேற்படும்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் மக்களை திசைதிருப்புவதற்காக போலியான விடயங்களை செய்யாமல், நாட்டு மக்களின் நலனுக்காக செயற்படவேண்டும் என்றும் கோரியுள்ளார்.