சுவாதி – ராம்குமார் வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழகத்தையே உலுக்கிய ராம்குமார் – சுவாதி வழக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை வெளிவராத அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மென்பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறை வளாகத்தில் ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது தந்தை பரமசிவம் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில், பிரேத பரிசோதனை மருத்துவர் பாலசுப்பிரமணியம் மற்றும் சிறை மருத்துவர் நவீன் ஆகியோர் நேற்று வாக்குமூலம் அளித்தனர்.

அதன்படி ராம்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் இறந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ராம்குமார் சிறையிலேயே இறந்துவிட்டார் என சிறைத்துறை மருத்துவரின் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ராம்குமார் சிறையிலேயே இறந்துவிட்டரா? என்ற கேள்விக்கு பதிலளித்த சிறை மருத்துவர் நவீன், ராம்குமாருக்கு இதயதுடிப்பு இல்லாததால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாகவும், ஈ.சி.ஜி எடுத்த பிறகே இறந்ததாக கூறமுடியும் என்பதால் இதயதுடிப்பு நின்றுவிட்டது என கேள்விகுறியுடன் சான்று வழங்கியதாகவும் கூறினார்.

ராம்குமாரின் உடலில் 4 சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி சையது அப்துல் காதர் கூறியிருந்த நிலையில், காயங்கள் ஏதும் இல்லை எனவும், மேல் உதட்டில் மின்சாரம் பாய்ந்ததற்கான அறிகுறி தெரியவில்லை என்றும் பிரேத பரிசோதனை மருத்துவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

ராம்குமார் மரணம் தொடர்பான விசாரணையில் அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.