தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தனின் மீது இனம்தெரியாத மர்ம நபர்களால் சரமாரியாக கத்திக் குத்துத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(1.7.2022) அதிகாலை-4.15 மணியளவில் யாழ்.சென் ஜோன் போஸ்கோ பாடசாலைக்கு அருகில் மருதடிக் குளத்தடியில் நடந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை(01.7.2022) அதிகாலை எரிபொருள் பெறும் பொருட்டுத் தனது நண்பர்களின் வரவுக்காக மருதடிக் குளத்தடியில் பத்திரிகை வாசித்தவாறு காத்திருந்துள்ளார்.
அப்போது அவர் பின்னால் வந்த இரு நபர்கள் அவரின் முதுகு மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்நிலையில் அவர் சுதாகரித்து எழும்ப முற்பட்ட போது அவரின் தலையிலும் கத்திக் குத்துத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன்பின்னரும் குறித்த இருவரும் மூர்க்கத்தனமான முறையில் அவரைக் கொலை செய்யும் நோக்குடன் கழுத்தை நோக்கி கத்திக் குத்துத் தாக்குதல் நடாத்த முற்பட்ட நிலையில் அவர் தனது கைகளால் அதனைத் தடுத்தார். இதன்போது அவர் கையில் கத்திக் குத்துக் காரணமாகப் படுகாயங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த இருவரையும் நிஷாந்தன் துரத்திச் சென்ற போதும் அவர்கள் இருவரும் துவிச்சக்கரவண்டியில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த கத்திக் குத்துத் தாக்குதலை நடாத்தியவர்களில் ஒருவர் சாரம் அணிந்திருந்ததுடன் மற்றைய நபர் அரைக் காற்சட்டை அணிந்திருந்தாகவும், தன் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடாத்த வந்த இருவரும் மாஸ்க் மூலம் முகங்களை மறைத்திருந்ததாகவும், இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது அப்பகுதியில் வேறு எவரும் இருந்திருக்கவில்லை எனவும் சம்பவத்தில் படுகாயமடைந்த தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்தார்.
அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மையில் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நான் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில் இது திட்டமிட்டு இடம்பெற்ற தாக்குதலாக இருக்கலாம் எனத் தான் சந்தேகிப்பதாகவும், தன்னைக் கொலை செய்யும் நோக்குடனேயே இந்தக் கத்திக் குத்துத் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளான நிஷாந்தன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
(செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி)