தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என திமுக வின் தலைவர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துவிட்டார். இந்த நிலையில் அவருக்கு பாஜக சார்பில் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டியிடுவார் என்று தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் தூத்துக்குடியில் பாஜக போட்டியிடக்கூடாது என்றும், அதிமுக தான் களமிறங்க வேண்டும் என்றும் அதிமுகவினர் போராடுகின்றனர். இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பி.எஸ் திகைத்துப் போயுள்ளனர். கனிமொழி கடந்த 2 வருடங்களாகவே தொகுதியில் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது மக்களுக்கு ஆதரவாக இருந்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நேர்காணலின்போது தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் 41 பேர் கலந்து கொண்டனர். விண்ணப்பித்தவர்கள் அனைவரையும் வரவழைத்து நேர்காணல் நடைபெற்றது. திமுக சார்பில் கனிமொழியை எதிர்த்து பாஜக போட்டியிட்டால் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வென்று விடுவார். ஆகவே கனிமொழியை எதிர்க்க அதிமுக சார்பில் ஒருவரைத்தான் நிறுத்தவேண்டும் ஸ்டெர்லைட் பிரச்சனையில் பாஜகவுக்கு கெட்டபெயர் உள்ளது. இதுவே அதிமுக போட்டியிட்டால் ஸ்டெர்லைட்டை மூடியதே நாங்கள் தான் என்று பிரச்சாரம் செய்யலாம் என்று கூறியுள்ளனர். இவர்களின் கோரிக்கை அடிப்படையில் ஒருவேளை தூத்துக்குடியில் அதிமுகவே போட்டியிடலாம் என்று அரசியல் வட்டாரங்களில் செய்தி கசிகிறது.