பிரித்தானியாவில் இளம்பெண் தொடர்ந்த விசித்திரமான வழக்கு

பிரித்தானிய இளம்பெண் ஒருவர் தனது தாயின் மருத்துவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மில்லியன் கணக்கான பவுண்டுகள் நஷ்டஈடு வழங்கப்பட உள்ளது.

Evie Toombes (20), பிரித்தானியாவில் பிரபலமான showjumper என்னும், குதிரைகள் தடை தாண்டி ஓடும் விளையாட்டில் ஒரு நட்சத்திர வீராங்கனை. ஆனால், அவருக்கு spina bifida என்றொரு பிரச்சினை உள்ளது. அதாவது, சில நேரங்களில், 24 மணி நேரமும் அவரது உடலில் குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கவேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு.

Evie, தன் நிலைமைக்கு காரணமாக இருந்ததாக, தன் தாயின் மகப்பேறு மருத்துவரான Dr Philip Mitchell என்பவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதாவது, தன் தாய் கர்ப்பமாக இருந்தபோது, அவர் கருவிலிருக்கும் குழந்தைக்கு spina bifida பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ஃபோலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என மருத்துவர் ஆலோசனை அளிக்கவில்லை என்றும், அப்படி அவர் ஆலோசனை அளித்திருந்தால், இப்படி ஒரு பிரச்சினையுடன் அனுதினமும் போராடிக்கொண்டிருக்கவேண்டிய ஒரு நிலைமை தனக்கு ஏற்பட்டிருக்காது என்றும், ஒரு வேளை கர்ப்பமுறுவதையே தன் தாய் தவிர்த்திருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் வாதத்தை முன்வைத்துள்ளார்.

அதாவது, அந்த மருத்துவர் முறையான ஆலோசனையை தன் தாய்க்கு அளித்திருந்தால், தான் பிறந்திருக்கவே மாட்டேன் என்பது அவர் தரப்பு வாதம்.

வழக்கை விசாரித்த நீதிபதியாகிய Rosalind Coe, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அதாவது, Evieயின் தாய்க்கு, அவரது மருத்துவர் முறையான ஆலோசனை வழங்கியிருந்தால், அவர் கருத்தரிப்பதை தாமதப்படுத்தியிருக்கலாம் என்று கூறியுள்ள நீதிபதி, அப்படி தாமதித்திருந்தால், ஒரு வேளை ஆரோக்கியமான ஒரு குழந்தை பிறந்திருக்கலாம் என்றும் கூறி, Evieக்கு மிகப்பெரிய தொகை ஒன்றை இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அது எவ்வளவு என Evieயின் சட்டத்தரணிகள் நேரடியாக தெரிவிக்காவிட்டாலும், அது அவரது வாழ்நாள் முழுவதும் அவரது தேவைகளை சந்திக்க போதுமான அளவுக்கான பெரிய தொகை என்று கூறியுள்ளார்கள்.

இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாக கருதப்படுகிறது. காரணம் என்னவென்றால், ஒரு பெண் கர்ப்பமுறுவதற்கு முன், அவருக்கு சரியான ஆலோசனை அளிக்காததால் அவருக்கு மோசமான உடல் நலப் பிரச்சினை உடைய குழந்தை பிறந்தால், அதற்காக அந்த மருத்துவர் இனி பொறுப்பேற்கவேண்டியிருக்கும் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்பதால்தான்.