Friday, February 3, 2023
HomeEvents-நிகழ்வுகள்யாழ்.சுன்னாகத்தில் நடந்தேறிய முத்திரைகளின் கண்காட்சி

யாழ்.சுன்னாகத்தில் நடந்தேறிய முத்திரைகளின் கண்காட்சி

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சுன்னாகம் பொதுநூலக நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கொக்குவில் தபாலதிபரின் அனுசரணையில் இலங்கையில் வெளிவந்த முத்திரைகளின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(25.11.2022) யாழ்.சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

காலை-9 மணியளவில் சுன்னாகம் பொதுநூலகப் பிரதம நூலகர் திருமதி.ஜெயலட்சுமி சுதர்சன் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் யாழ்.மாவட்டப் பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.எ.டி.பெர்னாண்டோ, வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரன் தர்சன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சிக் கூடத்தைச் சம்பிராதாயபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் கொக்குவில் தபாலக அதிபர் அ.யோ.இ.இ.லெம்பேட், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் திருமதி.உ.சாரதா, வலிகாமம் தெற்குப் பிரதேச சபை உறுப்பினர்களான இ.அரிகரன், செ.விஜயநாதன், மாணவர்கள், எழுத்தாளர்கள், சுன்னாகம் பொதுநூலக உத்தியோகத்தர்கள், கொக்குவில் தபாலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மாலை-4.30 மணி வரை இடம்பெற்ற குறித்த கண்காட்சியை மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இதேவேளை, மேற்படி கண்காட்சியில் உலகின் முதலாவது முத்திரை, 1949 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வெளியிடப்பட்ட முத்திரைகள் என அரிய பல முத்திரைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அத்துடன் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கே.ரவிச்சந்திரன் என்பவரின் தனிமனித முயற்சியினால் சேகரிக்கப்பட்ட இலங்கையின் பழங்காலத்து நாணயங்கள், சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நாணயக் குற்றிகள் உள்ளிட்ட பல்வேறு நாணயங்கள், வெளிநாடுகள் பலவற்றினதும் பழமையான நாணயக் குற்றிகள், நாணயத் தாள்கள் என அரிய பல விடயங்களும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular