கனடாவின் அறிவிப்பால் கடும் அதிருப்தியில் இலங்கை அரசாங்கம்

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கான பயணிகளுக்கு கனடா விடுத்துள்ள ஆலோசனை தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இராஜதந்திரவட்டாரங்கள் மூலமாக தனது அதிருப்தியை வெளியிடவுள்ளது.

கனடா இவ்வாறான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை நியாயமற்ற விடயம் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே இந்த விவகாரம் குறித்து கனடா தூதுவருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் தனது தூதரகம் ஊடாகவும் அதிருப்தியை வெளியிடும் என தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு இது குறித்து உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது.

இலங்கையில் மோசடையும் பொருளாதார நிலைமை குறித்து தனது நாட்டிலிருந்து இலங்கை செல்பவர்களிற்கு கனடா எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இலங்கைக்கான பயண ஆலோசனையில் கனடா இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகள் உணவுகள் எரிபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என கனடா தெரிவித்துள்ளது.

பொருளாதார ஸ்திரதன்மை இன்மை சுகாதார சேவைகள் உட்பட பொதுச்சேவைகள் பாதிக்கப்படும் நிலைமையை ஏற்படுத்தலாம் என கனடா தெரிவித்துள்ளது.

பொருளாதார ஸ்திரதன்மை வளங்கள் குறைந்தளவில் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தலாம் பாதுகாப்பு நிலவரம் மோசமடையும் நிலையை ஏற்படுத்தலாம் எனவும் கனடா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு செல்பவர்கள் உணவு எரிபொருள் குடிநீர் போன்றவற்றை நீண்டகால குழப்பநிலை ஏற்படக்கூடிய ஆபத்தினை கருத்தில் கொண்டுபோதியளவிற்கு தம்வசம் வைத்திருக்கவேண்டும் எனவும் கனடா கேட்டுக்கொண்டுள்ளது.

வர்த்தக நிலையங்கள் எரிபொருள் நிலையங்கள் மருந்தகங்களில் நீண்ட வரிசைகளை எதிர்பார்க்கவேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் கனடா தெரிவித்துள்ளது