Tuesday, August 16, 2022
Homecorvid 19 virusகொரோனாவிலிருந்து விடுபட சகல ஆலயங்களிலும் பத்து நிமிடங்கள் ஒன்றாக மணி ஒலிக்கச் செய்யவும்: யாழில் இந்துசமயத்...

கொரோனாவிலிருந்து விடுபட சகல ஆலயங்களிலும் பத்து நிமிடங்கள் ஒன்றாக மணி ஒலிக்கச் செய்யவும்: யாழில் இந்துசமயத் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் (Video)

சகல ஆலயங்களிலும் நாளை சனிக்கிழமை(07) முதல் பகல்-12 மணிக்கு மணிகளை பத்து நிமிடங்கள் ஒன்றாக ஒலிக்கச் செய்து கொரோனாவிலிருந்து விடுபட அனைத்து மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதற்கு ஆலய நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், கோப்பாய் சுப்பிரமணிய கோட்டத்தின் தலைவர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள் ஆகியோர் இணைந்து கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு இந்தப் பிரார்த்தனையை மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை(06) பிற்பகல்-06.15 மணியளவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறு ஆலயங்களில் பத்துநிமிடங்கள் மணிகள் ஒலிக்கும் போது வீடுகளிலும், அலுவலகங்களிலும், வாணிப நிலையங்களிலும், வீதியால் செல்லும் போதும் பிரார்த்தனை செய்யுங்கள். கொடிய கொரோனாவிலிருந்து எங்கள் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனப் பிரார்த்தியுங்கள்.

சகல ஆலயங்களில் மாத்திரமன்றி ஏனைய மத வழிபாட்டிடங்களிலும் பகல்- 12 முதல் தொடர்ச்சியாகப் பத்துநிமிடங்கள் பத்து நாட்களுக்கு மணிகள் ஒலிக்கச் செய்து கூட்டாகப் பிரார்த்தியுங்கள்.

இலங்கை முழுவதும் மணி ஓசை கேட்கின்ற பிரார்த்தனை தொடர வேண்டும். இந்தப் பிரார்த்தனை மூலம் நிச்சயம் ஒரு விடிவு ஏற்படும் என்பது எங்கள் நம்பிக்கை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட மேலதிக கருத்துக்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி;- செ. ரவிசாந்}

RELATED ARTICLES

Most Popular