யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று, கருவளத் துறைப் பிரிவுக்கு அவசர மருந்துத் தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா சிட்னியில் வசிக்கும் கணக்காளாரான யாழ்.ஏழாலையைச் சேர்ந்த மகிந்தன் மகாதேவா சிவபூமி அறக்கட்டளை ஊடாகப் பன்னிரண்டு லட்சம் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளார்.
இன்று திங்கட்கிழமை(20.6.2022) முற்பகல்-11 மணியளவில் யாழ்.கோண்டாவிலில் அமைந்துள்ள சிவபூமி அறக்கட்டளையின் தலைமையகத்தில் வைத்து மகப்பேற்று மருத்துவ நிபுணர் நமசிவாயம் சரவணபவாவிடம் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் குறித்த நிதி உதவியை நேரடியாகக் கையளித்தார்.
இதேவேளை, சிவபூமி அறக்கட்டளை தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கும் நோயாளர்களின் மருத்துவத் தேவைகளுக்காகத் தொடர்ச்சியாகப் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)