Friday, February 3, 2023
HomeEvents-நிகழ்வுகள்சிறப்பிக்கப்பட்ட கொழும்பு சிவபூமி நிலையத் திறப்பு விழா: முன்னெடுக்கப்பட உள்ள பணிகள்

சிறப்பிக்கப்பட்ட கொழும்பு சிவபூமி நிலையத் திறப்பு விழா: முன்னெடுக்கப்பட உள்ள பணிகள்

யாழ்.கோண்டாவிலைத் தலைமையகமாகக் கொண்டு தொடர்ச்சியான அளப்பரிய சமய, சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் தனது பணிகளைத் தலைநகர் கொழும்பிற்கும் விஸ்தரித்துள்ளது.

கொழும்பு சிவபூமி நிலையத் திறப்பு விழா நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை(20.10.2022) முற்பகல்-10 மணி முதல் கொழும்பு பம்பலப்பிட்டி ஹக் வீதியில் அமைந்துள்ள 34 ஆம் இலக்க கட்டடத் தொகுதியில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தலைமையில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

சிவபூமி நிலையத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்திற்கு என மூன்று மாடிக் கட்டடத்தை அன்பளிப்பாக வழங்கிய திருமதி.திரவியம் சபாரட்ணம் அம்மையார் நாடா வெட்டிச் சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பிரார்த்தனை மண்டபத்தை அகில இலங்கை கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ.ஜெயராஜ், கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட முதல்வர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், கந்தர்மடம் வேதாந்த மடத்தின் எட்டாவது குருபீடாதிபதி ஸ்ரீவேத வித்யாசாகரர் சுவாமிகள், யாழ்.சின்மயா மிஷன் முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆன்மீகப் பெரியோர்களின் ஆசி உரைகளும் இடம்பெற்று இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியபோசனமும் பரிமாறப்பட்டது. அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறிய சிவலிங்கம் ஞாபகார்த்த அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தினர், பல்துறைசார்ந்தவர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கொழும்பு சிவபூமி நிலையத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கப் பெருமானுக்குத் தினமும் பூசை வழிபாடுகள் இடம்பெற உள்ளதுடன் 2 ஆவது மாடியில் அமைந்துள்ள தியான மண்டபத்தில் அன்பர்கள் தியானம் செய்வதற்கு ஏற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பண்ணிசை வகுப்புக்களும் இடம்பெற உள்ளன.

அத்துடன் சைவசித்தாந்த வகுப்புக்கள் விரைவில் ஆரம்பமாக உள்ளதுடன் கந்தபுராணப் படிப்பு, திருவாசக முற்றோதல் ஆகிய நிகழ்வுகளும் விரைவில் இடம்பெற உள்ளதாகச் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular