யாழ். மாவட்டச் சமூக அபிவிருத்தி மன்ற ஸ்தாபகரும், கூட்டுறவுத் துறையின் முன்னோடிகளில் ஒருவராகவும் திகழும் அமரர்- சண்முகம் ஞானப்பிரகாசத்தின் 32 ஆவது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வு இன்று சனிக்கிழமை(26.11.2022) முற்பகல்-10.30 மணி முதல் யாழ்.கந்தர்மடத்தில் அமைந்துள்ள யாழ்.மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க காரியாலய மண்டபத்தில் மேற்படி சங்கத்தின் உப தலைவியும், மூத்த கூட்டுறவாளருமான திருமதி.ஜோசப் ஜெபமணி தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இரண்டு நிமிட மெளன இறைவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் அமரர்- சண்முகம் ஞானப்பிரகாசத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.







தலைமை உரையைத் தொடர்ந்து யாழ்.மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க உபதலைவரும், ஏழாலையைச் சேர்ந்த மூத்த கூட்டுறவாளருமான க.மகாதேவன் அமரர்.சண்முகம் ஞானப்பிரகாசம் ஞாபகார்த்த நினைவுப் பேருரையை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட 50 பேருக்கு சண்முகம் ஞானப்பிரகாசம் நினைவாக கோப்பாய்ப் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.


மேற்படி நிகழ்வில் யாழ்.மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத் தலைவி திருமதி.சி.சுரபி, யாழ்.மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர்கள், பணியாளர்கள், யாழ்.மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கும் பல்வேறு சங்கங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொணடனர்.




(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)