ஆசிரியர்கள் வந்தாலும் வராவிட்டாலும் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும்

பாடசாலைகள் 21ம் திகதி திறக்கப்படும் போது ஆசிரியர்கள் சமூகமளிக்காவிட்டால் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களை பயன்படுத்துமாறும் எவர் வந்தாலும் வராவிட்டாலும் பாடசாலைகள் திறக்கப்படவேண்டும் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் அறிவுறுத்தியிருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், ”2 நாட்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு விளையாட்டு, கலை பாடங்களை புகட்டக் கூடிய திறமை வாய்ந்த உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களில் உள்ளனர். நீண்ட நாட்கள் இடைவெளியின் பின்னர் பாடசாலைக்கு திரும்பும் மாணவர்களை அன்புடன் வரவேற்க வேண்டும்.

அன்று ஆசிரியர்கள் சமூகமளிக்காவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி அவர்களிற்கான விளையாட்டு, கலை பாடங்களை கற்பிக்க முடியும்.

அனைத்து பிரதேச செயலாளர்களும் பாடசாலை நடவடிக்கைகளை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர்” என கலந்துரையாடலின் போது மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.