யாழ். ஏழாலையைச் சேர்ந்த பண்டிதர் அமரர். இராமு சுப்பிரமணியத்தின் மூன்றாவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவரால் சந்நிதியான் ஆச்சிரமத்தின் பெரும் பணிகளை வியந்தும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி அம்பாளின் அருள் வேண்டியும், வேறு சில விடயங்களை உள்ளடக்கியும் இயற்றப்பட்ட சிலேடை வெண்பாத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை(02.12.2022) முற்பகல்-10.45 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.


மேற்படி நிகழ்வில் குப்பிழான் தெற்கின் ஓய்வுநிலைக் கிராம சேவகர் சோ.பரமநாதன் கலந்து கொண்டு நூல் வெளியீட்டுரையையும், பருத்தித்துறை புற்றளை மகாவித்தியாலயத்தின் இளைப்பாறிய அதிபர் ஆறுமுகம் சிவநாதன் நூலின் ஆய்வுரையையும் நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து குறித்த நூலை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் வெளியிட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவருக்கும் குறித்த நூலின் பிரதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.பல நூற்றுக்கணக்கான பிரதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.



(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)