Thursday, December 1, 2022
Homeஆன்மிகம்சீரடி சாயி பாபாவின் அவதார நாளில் ஊரெழுவில் இராமபிரானின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை(Photos)

சீரடி சாயி பாபாவின் அவதார நாளில் ஊரெழுவில் இராமபிரானின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை(Photos)

சீரடி சாயி பாபாவின் அவதார தினத்தை முன்னிட்டு யாழ்.ஊரெழுவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியசாயி மண்டலி நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த புதன்கிழமை(28.9.2022) பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

காலை-8 மணியளவில் நகர சங்கீர்த்தனத்துடன் சீரடி சாயி பாபாவால் ஆசிர்வதிக்கப்பட்ட பாதமும், புதிதாக உருவாக்கப்பட்ட ஏழு அடி உயர இராமபிரானின் திருவுருவச் சிலையும் அன்பர்கள் புடைசூழ நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட ஊரெழு பொக்கணை நீரூற்றுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.தொடர்ந்து வழிபாடுகளும் இடம்பெற்றது.

அங்கு தீர்த்தம் எடுத்துவரப்பட்டு மீண்டும் மேற்படி நிலையத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து அங்கு இராமபிரானின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தொடர்ந்து இராமபிரானுக்கும், சீரடி சாயி பாபாவுக்கும் பஞ்ச கெளவியங்களால் விசேட அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை வழிபாடுகளும், சிறப்புப் பஜனை வழிபாடுகளும் இடம்பெற்றன.

இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரும் தமது கரங்களால் சீரடி சாயி பாபாவுக்கு அபிஷேகம் செய்து வழிபடச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊரெழு சிவபூரணி முத்தமிழ்மன்ற அறநெறிப் பாடசாலை அதிபர் து.ஜெகதீஸ்வரன் சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் இராமபிரானின் திருவுருவச் சிலையைத் தத்ரூபமாக உருவாக்கிய வலிகாமம் கல்வி வலய ஓய்வுநிலை சித்திரபாட ஆசிரிய ஆலோசகரும், மேற்படி நிலையத் தலைவருமான சரவணமுத்து துரைவீரசிங்கம் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டார்.

மேற்படி நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியபோசனமும் வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular