Sunday, February 5, 2023
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்எங்களை அறியாமல் அழிக்கின்ற சூழ்ச்சி போதைப் பொருள் பாவனை!

எங்களை அறியாமல் அழிக்கின்ற சூழ்ச்சி போதைப் பொருள் பாவனை!

எங்களை அறியாமல் எங்களை அடிமைப்படுத்துகின்ற, அழிக்கின்ற சூழ்ச்சியாக வடபகுதியைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போதைப் பொருள் பாவனை காணப்படுகின்றது எனவும், இதிலிருந்து விடுபடுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்சன் தெரிவித்தார்.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தெல்லிப்பழை உப அலுவலகம், தெல்லிப்பழைப் பொதுநூலகத்துடன் இணைந்து தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி சமூகங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்த போதைப் பொருளுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் யாழ்.தெல்லிப்பழையில் இடம்பெற்றது.

பேரணியின் நிறைவில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெறும் பேரணிகள், போராட்டங்கள் நடாத்துவதன் மூலமும், கோஷங்கள் எழுப்புவதாலும் மாத்திரம் நாங்கள் போதையை ஒழித்துவிட முடியாது. நாங்கள் ஒவ்வொருவரும் மனதார அதிலிருந்து விடுபட வேண்டும்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்ட யாரேனும் ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமையானவராக இருந்தால் அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு எமது சமூகத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அனைவரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, எங்கள் சமுதாயம் கழுத்திலே நஞ்சினைச் சுமந்து உரிமைக்காகப் போராடிய இனம். இன்று போதையிலேயே மிதந்து அழிந்து கொண்டிருப்பது வேதனையான விடயம். இவ்வாறானதொரு காலப் பகுதியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்த தெல்லிப்பழைப் பொதுநூலகத்தினருக்குப் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக மேற்படி விழிப்புணர்வுப் பேரணி, கூட்டத்தில் கலந்து கொண்ட வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular