வன்முறைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது!(Photo)

தற்போது அரசாங்கத்திற்கு எதிராகப் பல இடங்களிலும் முன்னெடுக்கப்படும் போராட்டம் எங்கு சென்று முடியப் போகிறது? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. வெறுமனே வரையரையற்ற வன்முறைகளை மேற்கொள்வதையோ அல்லது அராஜக நிலையை ஏற்படுத்துவதையோ போராட்டக்காரர்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் உண்மையான வழிமுறையாக இருக்க முடியாது எனப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த தமிழ் அரசியல்வாதியுமான சி.கா.செந்திவேல் வலியுறுத்தியுள்ளார்.

இன்று புதன்கிழமை(11.05.2022) இல-62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கட்சியின் வடபிராந்தியப் பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை இலங்கை அரசியலில் என்றுமில்லாத அளவிற்கு மிக உச்சக் கட்டக் குழப்ப நிலையாக காணப்படுகின்றது.

ஐக்கியதேசியக் கட்சியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் தொடக்கி வைத்த ஒரு நாசகாரமான பாதை தான் இனவாதம். இனவாதத்தைத் தூண்டி நியாயமான உரிமை கேட்ட தமிழ்மக்களுக்கு எதிராகத் தொடங்கிய அந்த மோசமான அடக்குமுறை 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மிகப் பெரும் படுகொலையாக அரங்கேற்றப்பட்டது.

இவ்வாறான கொடூர சம்பவங்கள் இடம்பெற்ற போது பேரினவாதிகளும், இந்தப் பேரினவாதிகளின் மறைவில் இருந்த ஆளும் வர்க்கத்தினரும் தமிழ்மக்களையும், பின்னர் முஸ்லீம்களையும் எதிரிகளாகக் காட்டினர். இன்று அதே ஆளும் வர்க்கத்தினரை மக்கள் தேடித் தேடித் தாக்குகின்ற, விரட்டுகின்ற புதிய காட்சிகளை நாம் காணக் கூடியதாக உள்ளது.

எனவே, இத்தகைய சூழலில் ஒரு அறிவார்ந்த, தூர நோக்கு உடைய மக்கள் என்ற அடிப்படையில், இலங்கையின் சுதந்திரம், சுயாதிபத்தியம் பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எல்லா மக்களும் இணைந்து செயற்பட வேண்டியதொரு காலகட்டம் வந்திருப்பதாக நாங்கள் உணர்கின்றோம். தமிழ், சிங்கள, முஸ்லீம் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களும் ஒன்றிணைந்து நீதியான, ஜனநாயக, மக்கள் சார்பான ஆட்சியைக் கொண்டு வருவதற்கான முழு முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை எமது கட்சி இக்கட்டான இந்த வேளையில் வலியுறுத்துகின்றது.

தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் அனைத்திற்கும் அடிப்படையாக இலங்கையின் அரசியல் அமைப்பே அமைந்துள்ளது. இந்த அரசியல் அமைப்பின் கீழ் தான் ஒரு சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையும், சர்வாதிகார நடைமுறைகளும் செயற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் எனக் கூறப்படுகிறது. இந்த 51 பில்லியன் கடனும் எவ்வாறு வந்தது? என்பதை ஆராய்ந்து பார்த்தால் பல விடயங்கள் புலப்படும். இந்த நாட்டு இராணுவத்திற்குச் செலவழித்த பணம் அதிகமாக கடன்பட்ட பணமாகவே உள்ளது. தாம் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று கூறித் தான் 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். எனினும், அவர் பதவிக்கு வந்து இரண்டரை வருடங்களுக்குள் அவரின் முகம் கிழிபட்டு அவர் அம்பலமாகி நிற்கின்ற நிலையை நாங்கள் காண முடிகிறது.

மக்கள் தான் வரலாற்றை உருவாக்குபவர்கள். ஆகவே, இலங்கையின் வரலாற்றைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு மக்கள் முன்வர வேண்டும். ஆனாலும், மக்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். மக்கள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள முடியாது.

ஒருமுறை லெனின் ‘பாராளுமன்றம் கள்வர்களின் குகை’ என்று சொன்னார். அதனைத் தற்போது 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் நிரூபித்துள்ளனர். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புள்ளவர்களாக, ஊழலற்றவர்களாக இருந்திருந்தால் தற்போது நாடு இந்தக் கேவலமான நிலைக்குச் சென்றிருக்காது. கடந்த 74 வருட காலமாகப் பாராளுமன்றம் சென்றவர்கள் தமது பதவிகள் மூலம் சொத்துச் சேர்த்துக் கொண்டார்கள். தங்களைச் சேர்ந்தவர்களை வளர்த்துக் கொண்டனர்.

இன்று அரிசி, சீனி போன்றவற்றிற்கும் கட்டுப்பாடு விலைகள் எதுவும் கிடையாது. சீனி இறக்குமதியில் மிகப் பெரும் ஊழல் நடந்திருக்கிறது. மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாய ராஜபக்சவிற்கும் மிக நெருக்கமானவர்கள் தான் சீனியை இறக்குமதி செய்தனர்.ஆகவே, அவர்களுக்காகத் தான் கட்டுப்பாட்டு விலையை இல்லாமல் செய்தார்கள். கட்டுப்பாட்டு அதிகாரிகள் வீடுகளில் தூங்குகிறார்கள். இந்நிலையில் மக்களின் பணம் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுகின்றது.

எனவே, இன்றைய மோசமான பொருளாதாரக் கட்டமைப்பிற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும். அதற்குப் பதிலாக மக்கள் சார்பு அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)