இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை

நேற்று(14) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மாண்புமிகு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இலண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS மூலம் தமிழ் பல்கலைபடிப்புகள் நடத்திட தமிழ்துறை மீளுருவாக்கம் செய்திட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஊடகத்துறையினரைச் சந்தித்துப் பேசிய இந்நிகழ்வில்; ஆபிரகாம் பண்டிதரின் கொள்ளுப் பெயர்த்தியும், ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் துணைப் பொருளாளருமான முனைவர். பொன்னம்மாள், முனைவர். கனகலட்சுமி, முனைவர் பா. இறையரசன், திரு. தமிழ் பாரதன், திரை இயக்குநர் ஹரி உத்ரா, கவிஞர் மறத்தமிழ் வேந்தன், இதழாளர் ரியாஸ், மூத்த பத்திரிகையாளர் இரவி குணவதி மைந்தன் முதலியோர் கலந்து கொண்டனர்.

இலண்டன் பல்கலைக் கழகத்தில் தென்கிழக்காசிய ஆப்பிரிக்கப் பள்ளியில் நடைபெற்று வந்த தமிழ்த்துறை 1916 முதல் 1996 வரை இயங்கி, நிதி பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளது. இலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறையை முழுதாக மீட்டுருவாக்கம் 100 கோடி ரூபாய் தேவைப்படுகிற நிலையில், தமிழக அரசு குறைந்தது 25 கோடியாவது நிதி நல்க வேண்டும் என்று முனைவர் பொன்னம்மாள் கேட்டுக்கொண்டார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ஏற்கனவே இலண்டன் பல்கலைக்கழகம் SOAS க்கு சென்றுள்ளார் என்பதும், வங்காள மொழி வளர்ச்சிக்கு 5 கோடி நிதி உதவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜி.யூ.போப் அவர்கள் 1885 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றுக் கொடுத்துள்ளார். தமிழகம் வந்த ஜியூ போப் மாநிலக்கல்லூரியில் பணியாற்றியதுடன் திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் அப்போது நிதிக்கு உதவினர்.

இப்போது உலகத்தமிழர்கள் ஒன்றரை கோடி திரட்டி உதவியுள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசும் உதவி புரிந்து, மூடப்பட்ட தமிழ்த்துறையை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்று முனைவர் பா.இறையரசன் கூறினார்.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகள் பற்றி பத்திரிக்கையாளர்கள் வினா எழுப்பினர். அவை தமிழ்த்துறை தொடங்கப்பெற்றவுடன் ஆய்வு செய்யப்பெறும் என்று பதிலளிக்கப்பட்டது.

அடிப்படைக் கல்வி முதல் ஆய்வுப் படிப்பு வரை அனைவரும் படிக்கவும் உலகெங்கும் தமிழைப் பரப்ப வேண்டும் எனும் ஒரே நோக்கோடு தமிழ்த்துறை அமைக்கப் படுகிறது மேலும் தமிழில் உயர்கல்வி படிக்க வேண்டுமென்றால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் தான் வரவேண்டும் தமிழ்த் துறை அமைத்தால் அங்கேயே படித்துக் கொள்ளும் சூழல் ஏற்படும் என்பதைக் குறித்து முனைவர் கனகலட்சுமி பேசினார்.

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை (TamilStudiesUK) சார்பாக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று காலை செய்தியாளர் சந்திப்பு நடத்ததையடுத்து, மாலை 7.30 மணியளவில் முனைவர் பொன்னம்மாள் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளார்.