Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்யாழ்.சுன்னாகத்தில் வலம் வந்த வாசிப்பு ஊக்குவிப்பு விழிப்புணர்வு ஊர்திப் பவனி (Photos)

யாழ்.சுன்னாகத்தில் வலம் வந்த வாசிப்பு ஊக்குவிப்பு விழிப்புணர்வு ஊர்திப் பவனி (Photos)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வலிகாமம் தெற்குப் பிரதேச சபை, சுன்னாகம் பொதுநூலக நிர்வாகம் ஆகியன இணைந்து நடாத்திய வாசிப்பு ஊக்குவிப்பு விழிப்புணர்வு ஊர்திப் பவனி இன்று செவ்வாய்க்கிழமை (22.11.2022) இடம்பெற்றது.

சுன்னாகம் பொதுநூலகப் பிரதம நூலகர் திருமதி. ஜெயலட்சுமி சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரன் தர்சன், வலிகாமம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும், எழுத்தாளருமான சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன் (இயல்வாணன்), வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் திருமதி.உ.சாரதா, வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் உபதவிசாளர் இ.பரமேஸ்வரலிங்கம், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் உறுப்பினர்களான பா.சுரேஸ்குமார், செ. உதயகுமாரன், இ.அரிகரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இன்று காலை-8.45 மணியளவில் சுன்னாகம் பொதுநூலக முன்றலில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து வாசிப்புத் தொடர்பான விழிப்புணர்வு உரைகள் இடம்பெற்றன.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மாணவர்களின் வாசிப்பு ஊக்குவிப்புத் தாளலய நிகழ்வு இடம்பெற்றதுடன் மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து இரண்டு சம்பவங்களை உள்ளடக்கிய வாசிப்பு விழிப்புணர்வு நாடகமும் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காலை-09 மணியளவில் சுன்னாகம் பொதுநூலக முன்றலிலிலிருந்து பயன்தரு நூல்கள் பலவற்றை உள்ளடக்கி அலங்கரிக்கப்பட்ட வாசிப்பு ஊக்குவிப்பு விழிப்புணர்வு ஊர்திப் பவனி ஆரம்பமானது. குறித்த ஊர்திப் பவனி காங்கேசன்துறை வீதி, சுன்னாகம் சந்தி ஊடாக சுன்னாகம் பிரதான பேருந்து தரிப்பிட நிலையத்தை அடைந்தது. அங்கும் வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து டாக்டர் சுப்பிரமணியம் வீதி ஊடாகப் பாடசாலைகள், முன்பள்ளிகளைச் சென்றடைந்து சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மற்றும் ஆரம்பப் பாடசாலைக்கும் சென்று பின்னர் டச்சு வீதி, கைதடி- மானிப்பாய் வீதி, மருதனார்மடம் சந்தி ஊடாகச் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியைச் சென்றடைந்து அங்கிருந்து பின்னர் பிற்பகல்-01.45 மணியளவில் மீண்டும் சுன்னாகம் பொதுநூலகத்தைச் சென்றடைந்தது.

மேற்படி விழிப்புணர்வு ஊர்திப் பவனியில் வலம் வந்த நூல்களை மாணவர்கள்,முன்பள்ளிச் சிறார்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டுப் பயனடைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular