எங்கள் பாடசாலையில் மொத்தமாக 3000 மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில் அவர்களில் இரண்டாயிரம் மாணவர்கள் தினமும் பாடசாலைக்குத் துவிச்சக்கர வண்டிகளில் வரும் போது ஒருநாளைக்குச் சுமார்-3 லட்சம் தொடக்கம் 4 லட்சம் ரூபாய்களை சேமிக்க முடியும். யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களிடையேயும் துவிச்சக்கர வண்டிப் பாவனையை அதிகரிக்கும் போது ஒருநாளைக்குச் சுமார்-1.5 மில்லியன் ரூபாவிலிருந்து 2 மில்லியன் ரூபா வரை சேமிக்க முடியும் என யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையேயான சுகநலனில் அக்கறை கொள்ளலில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் “யாழ் ஆரோக்கிய நகரம்” எனும் செயற்திட்டத்தின் கீழான “ஆரோக்கியத்தின் பாதையில்” எனும் தலைப்பிலான விழிப்புணர்வு ஈருருளிப் பேரணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி பேரணியின் நிறைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கடந்த மாதம் ஓர் விழிப்புணர்வுத் துவிச்சக்கரவண்டிப் பயணத்தினை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது. இந்தப் பயணம் அகில இலங்கை ரீதியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் முன்னதாகச் சுமார்-35 வீதமான மாணவர்களே இதுவரை துவிச்சக்கர வண்டிகளில் பயணித்து வந்து கொண்டிருந்தார்கள். நாம் முன்னெடுத்த விழிப்புணர்வுத் துவிச்சக்கரவண்டிப் பயணம் மூலமாகவும், மற்றும் வகுப்பறைகளில் மாணவர்களை ஊக்குவித்ததன் மூலமாகவும் சுமார்-70 வீதமாகத் தற்போது எங்கள் பாடசாலையில் துவிச்சக்கரவண்டிப் பாவனை அதிகரித்துள்ளது.
இவ்வாறு துவிச்சக்கரவண்டிப் பாவனையை நாம் மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாட்டிற்கு நன்மையைப் பெற்றுத் தரும்.
எமது பாடசாலை மாணவர்களில் 1/3 பகுதி மாணவர்கள் உடல் பருமன் மிக்கவர்களாக காணப்படுகின்றார்கள். இது ஒரு ஆபத்தான அறிகுறியாகும். இதனை நாங்கள் இல்லாமல் செய்ய வேண்டுமாயின் எங்கள் அன்றாட வாழ்வில் உடலியல் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமானது. அதில் முதல் பகுதியாக மாணவர்கள் தினமும் துவிச்சக்கர வண்டிப் பாவனையில் ஈடுபட வேண்டும்.
துவிச்சக்கர வண்டிப் பாவனை மூலமாக மாணவர்கள் அன்றாடம் தங்கள் குறைந்தபட்சக் கலோரிகளையாவது அழிக்கக் கூடியதாக இருக்கும்.
தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பும் போது காலை வேளைகளில் ஏற்படும் விபத்துக்கள் உள்ளிட்ட செயற்பாடுகளைத் தடுப்பதை உறுதிப்படுத்தினால் கூடுதலான மாணவர்களைப் பாடசாலைக்குத் துவிச்சக்கர வண்டிகளில் அனுப்ப முடியும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் ஆதங்கமாக உள்ளது.
துவிச்சக்கரவண்டிப் பயணத்தை மாணவர்கள் மேற்கொள்வதற்குச் சில மாற்றங்களைச் செய்வது தொடர்பில் நான் சில பொலிஸ் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தேன். பாடசாலை நாட்களில் காலை-7 மணி தொடக்கம் 7.45 மணி வரையும், பிற்பகல்-1 மணி முதல் 1.45 மணி வரையும் சந்திகளில் பொலிஸாரின் கடமைகளை நேர்த்தியான முறையில் செய்ய வேண்டிய தேவையிருக்கின்றது எனச் சுட்டிக் காட்டியிருந்தேன். குறித்த நேரங்களில் வாகனங்களின் வேக எல்லையை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் பெற்றோர்கள் பயமின்றி மாணவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு முன்வருவார்கள்.
இதுதொடர்பில் நாங்கள் இங்குள்ள உயரதிகாரிகளுடன் கலந்துரையாடிப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அனைத்துப் பாடசாலை மாணவர்களும் பாடசாலைகளுக்குத் துவிச்சக்கரவண்டியில் வருவதற்குத் தூண்டுதலாக இருப்பதுடன் வருவார்கள்.
எங்கள் பாடசாலையில் ஆரோக்கிய உணவகத்தைக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தோம். இதன்மூலம் ஆரோக்கிய உணவுகள் மாத்திரமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களும் ஆரோக்கிய உணவுகளின் பயன்பாட்டிற்காகத் தங்களைத் தாங்களே பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)