கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் களமிறங்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அமேதி தவிர்த்து 2 வது தொகுதியாக வயநாட்டை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதி எம்.பியாக உள்ளவர் ராகுல் காந்தி. கடந்த முறை இவரிடம் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானி இம்முறையும் பாஜக சார்பில் அமேதியில் களம் காண்கிறார். இந்த நிலையில், கேரளாவின் வயநாட்டிலும் 2 வது தொகுதியாக ராகுல் காந்தி போட்டியிட முடிவு செய்துள்ளார். வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தொகுதியில் ராகுல்காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இதற்காக ராகுல்காந்தி நேற்றிரவு கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைந்தார். அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது, பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி, வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதன் மூலம் இந்தியாவை ஒரே மாதிரியாக அவர் நினைப்பதை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். அதன்பின்னர், பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு வயநாடு மக்கள் பதிலளிப்பார்கள் என குறிப்பிட்டார்.