Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்புதுக்குடியிருப்புப் பொலிஸாரின் அத்துமீறல்: எதிர்ப்பு நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் பூரண ஆதரவு

புதுக்குடியிருப்புப் பொலிஸாரின் அத்துமீறல்: எதிர்ப்பு நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் பூரண ஆதரவு

புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளரை அவமதிக்கும் விதமாகச் செயற்பட்ட பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து வடமாகாண இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கம் நாளை திங்கட்கிழமை(08.8.2022) முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தனது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை(07.8.2022) செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தில் சட்டவிரோதமான முறையில் எரிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அவ் விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட மேல் நடவடிக்கை அத்துமீறியதாகவும், குறித்த பிரதேச செயலாளரைத் தனிப்பட்ட ரீதியில் அவமதிப்பதாகவும், அரச சேவையை மலினப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸாரே இவ்வாறு முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமை கண்டனத்துக்குரியது. எனவே, மேற்படி பொலிஸாரின் அத்துமீறிய நடவடிக்கை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரைக் கோரி நிற்கின்றோம்.

மேலும், மேற்படி பொலிஸாரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வடமாகாண இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கத்தினால் 08.08.2022 திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதுடன் எமது ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்பதை அறியத் தருகின்றோம் எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular