Saturday, June 25, 2022
HomeEvents-நிகழ்வுகள்மல்லாகத்தில் ஆரம்பமாகிறது புத்தக அரங்க விழா(Photos)

மல்லாகத்தில் ஆரம்பமாகிறது புத்தக அரங்க விழா(Photos)

தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் ‘நூறு மலர்கள் மலரட்டும்’ எனும் தலைப்பிலான புத்தக அரங்க விழா எதிர்வரும் வெள்ளி(24.6.2022), சனி(25), ஞாயிற்றுக்கிழமைகளில்(26) மல்லாகம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

நாடக ஆற்றுகைகள், கலை இலக்கிய கலந்துரையாடல்கள், மாபெரும் புத்தகக் கண்காட்சி மலிவு விற்பனை ஆகிய அம்சங்களுடன் வெகு விமரிசையாக இடம்பெறவுள்ள இவ் விழாவினை ஆரம்பித்து வைக்கும் முகமாக ‘ஈழத்து இலக்கியங்களை அறிவோம்- நூல்களின் அறிமுகமும் கலந்துரையாடலும்’ நிகழ்வின் முதலாவது அமர்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(24) மாலை-4 மணியளவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

எழுத்தாளரும், பதிப்பாளரும், நடு இணைய இதழின் ஆசிரியருமான கோமகன் நினைவான இவ் அரங்கிற்குத் தாயகம் சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியரும், எங்கட புத்தகங்கள் சஞ்சிகையின் இணை ஆசிரியரும், ஆய்வாளருமான ச.சத்தியதேவன் தலைமை தாங்கவுள்ளதுடன், நூல்களின் அறிமுக உரைகள் வரிசையில் கவிஞர் சி.சிவசேகரம் ‘ஆச்சியின் கொண்டையூசிகள்’ கவிதைத் தொகுப்புப் பற்றி சட்டத்தரணியும், எழுத்தாளருமான சோ.தேவராஜாவும், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் அனுசரணையுடன் சிறுகதையாற்றுப்படை வெளியீடான ‘முகிழ்’ சிறுகதைத் தொகுப்பு தொடர்பாக ஆசிரிய ஆலோசகரும், எழுத்தாளருமான க.சிவகரனும், குழந்தை ம. சண்முகலிங்கனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த பெடோல் பிறெக்ற் இன் ‘கோகேசிய வெண்கட்டி வட்டம்’ நாடகப் பிரதி தொடர்பாக ஆசிரியரும், எழுத்தாளருமான ஸ்ரீலேகா பேரின்பகுமாரும், நா.நவராஜ்ஜின் ‘கெடுவாய் மனனே கதிகேள்’ நூல் தொடர்பாக உளவளத் துணையாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான செ.திலீபனும், தெணியானின் ‘மரக் கொக்கு’ நாவல் தொடர்பாக கலாசார உத்தியோகத்தர் ச.தனுஜனும் உரையாற்றவுள்ளனர்.

நிகழ்ச்சித் தொகுப்பினை இளம் எழுத்தாளரான மாதவி உமாசுதசர்மா மேற்கொள்வார்.

அதனைத் தொடர்ந்து மாலை-6.30 மணியளவில் செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் எலியார் எங்கே போனார்?, கோமாளிகள் ஆற்றுகை போன்ற சிறுவர் நாடகங்கள் அரங்கேற உள்ளன.

இதேவேளை, முற்றிலும் இலவசமாக இடம்பெறுகின்ற இம் முற்போக்கான மக்கள் கலை இலக்கிய முன்னெடுப்பில் ஆர்வமுள்ள அனைவரையும் இணையுமாறு தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular