தமிழ்மொழி தற்போது முழு அளவிலான டிஜிற்றல் மயமாக்கலுக்குத் தயாராக உள்ளது. எனினும், ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் குறைவு. நாம் விரும்பிய இலக்கை அடைய இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, நாம் தேவையற்ற, செய்ததையே திருப்பிச் செய்யும் ஆய்வுகளைத் தவிர்த்துத் தமிழின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் க.சுதாகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு கடந்த புதன்கிழமை(03.8.2022) காலை-09 மணி முதல் மேற்படி பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் “ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும்” (இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது) எனும் தொனிப் பொருளில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
மேற்படி மாநாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழில் செல்வளை ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு இணையாக விரிவாக்கப்பட வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழுக்கு என ஒதுக்கப்பட்ட யுனிகோட் இடங்கள் பல சிக்கல்கள் கொண்டதாக அறியப்பட்டுள்ளது. யுனிகோட் முறையில் சரியான இலக்கணப் பகுப்பாய்வுக்குத் தேவையான அளவுக்குத் தமிழுக்கு அதிக இடங்கள் தரப்படவில்லை.
எனவே, கணனி அறிவியலாளர்கள், மொழியியலாளர்கள், தமிழ்மொழி வல்லுநர்கள் இணைந்து இந்த விடயத்தில் செயலாற்ற முன்வர வேண்டும். எமது மொழியின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாமே மொழிக் கருவிகள், மென்பொருட்கள், வளங்களை உருவாக்க வேண்டும்.
தமிழியல் ஆய்வுமாநாடு ஒன்று விரைவில் தமிழின் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி ஆராயும் மாநாடாக இடம்பெற வேண்டும் என நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.
இன்னும் இரண்டு வருடங்களில் பொன்விழாக் காண இருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையானது தரமான ஆராய்ச்சிப் பங்களிப்பையும், சமூகப் பங்களிப்பையும் இன்னும் அகலப்படுத்தி ஈழத்துத் தமிழியல் மரபில் பரிணாம வளர்ச்சியையும், பெறுமானங்களையும் பேணிப் பாதுகாத்துப் பரவலாக்கம் செய்ய வேண்டும். அதற்கு இந்த மாநாடுகள் நிச்சயம் ஒரு தளமாக அமையும் என நம்புவோம்.
உலகத் தமிழர்களை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகள் ஊடாக ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்குத் தமிழியல் ஆய்வு மாநாடுகள் துணைபுரிய வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழியல் ஆய்வு மாநாடு பல்வேறு நாடுகளில் வாழும் தமிழியல் ஆராய்ச்சியாளர்களுடன் ஒரு வலைப்பின்னலைத் தோற்றுவித்துப் பெறுமதி மிக்க அறிவுப் புதுமைக்கும், பரவலாக்கத்திற்கும் வழி கோலும் நிலைக்கு நகர வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)