அரசாங்கத்திற்கு எதிரான ஹர்த்தாலுக்கு யாழிலும் பேராதரவு(Video,Photos)

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 2000 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து விடுத்த அழைப்பை ஏற்று நாடளாவிய ரீதியாக மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை(06.5.2022) முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் மற்றும் பணிப் புறக்கணிப்பிற்கு யாழிலும் பேராதரவு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ்.நகர், திருநெல்வேலி மற்றும் உரும்பிராய், மருதனார்மடம், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை உள்ளிட்ட வலிகாமத்தின் பகுதிகள், வடமராட்சி, தென்மராட்சி உட்படப் பல பகுதிகளிலும் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
வங்கிகள் இயங்கவில்லை.

பாடசாலைகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் செல்லாமையால் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

யாழ்.மாவட்டத்தின் முக்கிய சந்தையாக கருதப்படும் திருநெல்வேலிப் பொதுச் சந்தை மற்றும் சுன்னாகம் சந்தையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் வலிகாமத்தின் முக்கிய சந்தையாக கருதப்படும் மருதனார்மடம் பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகள் முற்றாக முடங்கியிருந்தன.

மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகள் சிலர் தற்போதைய கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகத் தமது வாழ்வாதாரத்தைக் கருத்திற் கொண்டு சந்தைக்கு வெளியே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

தனியார் போக்குவரத்துச் சேவைகள் முற்றாக முடங்கிய நிலையில் அரச பேருந்துச் சேவைகள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. தனியார் போக்குவரத்துச் சேவைகளின் பணிப் புறக்கணிப்புக் காரணமாக யாழ்.நகரத்தில் தனியார் பேருந்துகள் தரித்து நிற்கும் பகுதி வெறிச் சோடிக் காணப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)