பாஜக அமைச்சர் பியூஸ் கோயலுடன் சுதிஸ் அவர்கள் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் திமுக செயலாளர் துரை முருகனிடம் கூட்டணி குறித்து சில தேமுதிக நிர்வாகிகள் பேசினர். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து தேமுதிகவினர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர்.
பத்திரிக்கையாளர்கள் தேமுதிக ஒரே நேரத்தில் இரண்டு பக்கம் கூட்டணி அமைக்க பேசியது பற்றி கேள்வி எழுப்பினர்.

பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் நீ, வா, போ என ஒருமையில் பதில் அளித்தார் மற்றும் அவர்கள் கேட்ட கேள்விக்கு எதிர் கேள்வியை மிகுந்த கோபத்துடன் எழுப்பினார்.
விஜயகாந்த் மிகுந்த தைரியசாலி எனவும் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே எதிர்த்து கேள்வி எழுப்பினார் எனவும் கூறினார், ஆனால் ஸ்டாலின் தான் சட்டமன்றத்தில் தன் சட்டையைக் கிழித்துக்கொண்டு பத்திரிக்கையாளர்களிடம் இதைப் பாருங்கள் என்றார் .
அதனால் நாங்கள் யாருக்கும் பயந்தவர்கள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். இவையெல்லாம் ஒரு புறம் இருக்க பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு நடந்த அதே வேளையில் இன்று (மார்ச் 8) திமுக செயலாளர் துரை முருகன் வீட்டின் முன்பு தேமுதிக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது