Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்இட்டுக் கட்டப்பட்ட கதைகளை நிறுவ முயலும் பஷீர் காக்கா: மூத்த போராளி பொன்.மாஸ்டர் காட்டமான பதிலடி!

இட்டுக் கட்டப்பட்ட கதைகளை நிறுவ முயலும் பஷீர் காக்கா: மூத்த போராளி பொன்.மாஸ்டர் காட்டமான பதிலடி!

தியாகி திலீபனின் நினைவேந்தலில் இடம்பெற்ற நிகழ்வுகள் எல்லாமே திருப்தி அளித்தாலும், தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை இந்த நிகழ்வில் வெளிப்படுத்தியதை “திலீபனின் ஆன்மா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என மூத்த போராளி பஷீர் காக்கா ஆதங்கம் வெளியிட்டு ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். அந்த அறிக்கையில் ஒரு மூத்த போராளிக்கு இருக்கக் கூடிய அரசியல் ஞானம் பற்றிய விடயம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.அரசியல் நுணுக்கங்களை அறிய முடியாத ஒருவரா மூத்த போராளி திரு.பஷீர் காக்கா? என்னும் சந்தேகம் எழுகின்றது. நிச்சயம் அப்படி இருக்க முடியாது. ஆனால், முன்னணியின் அரசியலை சிதைக்க வேண்டுமென்றே பஷீர் காக்கா இட்டுக் கட்டப்பட்ட கதைகளை நிறுவ முயல்வதுதான் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கிறது என முன்னாள் மூத்த போராளியும், தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான பொன்மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை(02.10.2022) பிற்பகல் அவர் வெளியிட்டுள்ள நீண்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நடைபெற்ற நல்ல விடயங்கள் அனைத்தையும் வரவேற்பதாக கூறிக்கொண்டு தமது பக்கத் தவறாலேயே முழுக் குழப்பமும் ஏற்பட்டது என்பதை மறைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் பஷீர் காக்கா .

“பொத்துவிலில் இருந்து பகிரங்கமாக விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் ஆகுதியாகிய திலீபனின் ஊர்தி புறப்பட்டது மகிழ்ச்சியே” எனக் கூறிய பஷீர் காக்கா தீவக நினைவேந்தல் குழுவினரும், வேலன் சுவாமியின் குழுவினரும் எப்போது ஊர்திப் பவனியை ஆரம்பித்தனர்?, யாருக்குப் போட்டியாக ஆரம்பித்தனர்? என்ற உண்மையையும் அந்த அறிக்கையில் பேசியிருக்கலாம்.

இறுதி நாள் ஊரெழுவில் இருந்து நினைவேந்தல் கட்டமைப்பு ஊர்திப் பவனியை ஆரம்பித்து காலை 8.00 மணிக்கு கிட்டு பூங்காவில் இருந்து தியாக தீபம் திலீபனின் தூபியை வந்தடையும் என முன்னதாகவே வெளிப்படுத்தியிருந்தும் கூட கிட்டுப் பூங்காவில் ஒன்றுசேர்ந்து ஏன் உங்களால் வரமுடியவில்லை? என்ற உண்மையையும் அவர் சொல்லியிருக்க வேண்டும்.

நினைவேந்தல் ஏற்பாட்டு குழு தியாக தீபத்தின் 12 நினைவு நாட்களிலும் அடையாள உண்ணாவிரதம் இருந்த போதும் 25 ஆம் திகதி பஷீர் காக்கா உள்ளிட்ட தரப்பினர் தனியாக அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தது சரியா? என்பது பற்றியும் சொல்லியிருக்க வேண்டும்.

25 ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம் குறித்து முன்னாள் போராளி ஈஸ்வரன் எம்முடன் கதைத்து அதற்கு நாமும் இணங்கித் தூபிக்கு கிழக்குப் புறமாக அவர்களுக்காக புதிய பந்தல் அமைத்து கொடுத்த நிலையிலும் தனியாக பந்தலைப் பஷீர் காக்கா தரப்பு அமைத்து குழப்பியது பற்றியும் அறிக்கையில் பஷீர் காக்கா பேசியிருக்கவேண்டும்.

நினைவேந்தல் நாட்களில் குழப்பம் விளைவிப்பதற்காக தினமும் எமது கொட்டகைக்குள் மதுபோதையில் ஆட்களை அனுப்பி குழப்பம் விளைவிக்க படாதபாடுபட்ட உங்கள் பொதுக்கட்டமைப்பை உருவாக்க முயன்ற குழுவில் இருந்த ஆவா மற்றும் ஒட்டுக் குழுக்கள் பற்றியும் பேசியிருக்க வேண்டும்.

உங்கள் தரப்பினரின் நயவஞ்சகங்களை மறைத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சாடுவதன் உங்கள் நோக்கம் என்ன? என்பதை ஊகிப்பதற்கு மக்கள் அரங்கிலேயே விட்டுவிடுகின்றோம்.

பொத்துவில் – பொலிகண்டி அமைப்பினரின் உறுப்பினரான வேலன் சுவாமி 4 பெண்களை நினைவுத் தூபிக்குள் இறுதி நேரம் அனுப்பி குழப்பம் ஏற்படுத்தியமை பற்றியும் இறுதி நேரத்தில் தூக்கு காவடியை வரவழைத்து வேலன் சுவாமி, மணி குழு, ஜனநாயக போராளிகள் தரப்பு இணைந்து பொதுச்சுடர் ஏற்றப்படுவதற்கு முன்பே குழப்பம் முற்பட்டதையும் அந்தவேளையில், அங்கே பொதுச்சுடர் ஏற்றுவதற்குக் காத்திருந்த மாவீரரின் தந்தையான பூமிபாலன் என்பவரைத் தள்ளி விழுத்திப் பொதுச்சுடர் ஏற்றுவதற்கு திட்டமிட்டுத் தடை ஏற்படுத்தியதைப் பஷீர் காக்கா மறைக்காமல் சொல்லியிருக்க வேண்டும்.

இதன் பின்னர் உடனடியாக நினைவேந்தல் ஏற்பாட்டு குழு 10.48 என்ற தியாக தீபம் உயிர்நீத்த நேரத்தை கவனத்தில் கொண்டு தாயக விடுதலைப் போரில் இரு கண்களையும் இரு கைகளையும் இழந்த போராளி கிட்லரினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதையும் பஷீர் காக்கா மறைத்திருக்கக் கூடாது.

தியாகதீபம் திலீபன் உயிர்பிரிந்த நல்லூர் வடக்கு வீதியில் சம நேரத்தில் பொதுச்சுடர் ஏற்றுவதற்காகத் தாயக விடுதலைப் போரில் இரு கைகளையும் இரு கண்களையும் இழந்த போராளி ராகவன் காத்திருந்த வேளை அதற்குள் அத்துமீறி நுழைந்த மணி குழுவின் உறுப்பினரால் 10.46 மணிக்குத் தீபம் ஏற்றி குழப்பம் ஏற்படுத்தப்பட்டதையும் பஷீர் காக்கா மறைத்திருக்கக் கூடாது.

வார்த்தைக்கு வார்த்தை மாவீரரின் தந்தை எனத் தன்னை விழிக்கும் பஷீர் காக்கா இறுதிநாளில் மாவீரர் தந்தை, போராளிகள் திட்டமிட்டே தள்ளி விழுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட விடயங்கள் பற்றி இந்த அறிக்கையில் எதுவும் பேசாமல் தான் அவமானப்படுத்தப்பட்டதாக இட்டுக்கட்டப்பட்ட கதைகளைக் கூறி குழப்பிய தரப்பினருக்கு வெள்ளையடிக்கப் பஷீர் காக்கா முயல்வது எமக்கு ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் மக்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.

“எல்லாமே திருப்தி அளித்தாலும் தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை இந்நிகழ்வில் வெளிப்படுத்தியதைத் திலீபனின் ஆன்மா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதனை வலியுறுத்திக் கூறுகிறோம்” எனக் கூறும் பஷீர் காக்கா தானே அரசியல் விருப்பு வெறுப்பில் தான் செயற்பட்டிருந்தார் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பஷீர் காக்காவின் இந்த அரசியலை தியாக தீபம் திலீபனின் ஆன்மா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

முதல்நாள் நிகழ்வைப் பொதுவாக நடத்துவதில் எந்தச் சங்கடமும் இல்லை எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டுக் குழுப் பொறுப்பாளர் பொன் மாஸ்டர் கூறியிருந்தார். அவரது தரப்பில் பெரும்பாலும் அவர் மட்டுமே திலீபனைக் கண்டிருப்பவர். இவரது வார்த்தையை நம்பி இவ் வருடம் ஆரம்ப நிகழ்வுக்குச் சென்றோம். சட்டத்தரணி சுகாஷ் வரும் வரை எல்லாமே சுமுகமாக நடந்தன. இவர் ஒலிவாங்கியை எடுத்ததும் தமது முன்னாள் சகாக்களான மாநகர மேயர் தலைமையிலான அணியினரை சாடத் தொடங்கினார்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“ஒட்டுக்குழு என்ற பதமும் இதில் அடங்கியிருந்தது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாம் எந்த ஒரு அரசியல் தரப்பையும் சாடியிருக்கவில்லை.

ஒற்றையாட்சி தொடர்பாகவும், 13 ஆம் திருத்தம் தொடர்பாகவுமே பேசப்பட்டது. ஒற்றையாட்சி நிராகரிப்பு மற்றும் ஒட்டுக்குழு என்ற பதத்தை அங்கு நின்ற சிலர் தமக்கானதாக எடுத்துக் கொண்டமைக்காக தியாக தீபத்தின் அரசியலை நாம் பேசக் கூடாது என நினைக்கும் அளவுக்கு பஷீர் காக்கா மாறிவிட்டாரா? அல்லது மாற்றப்பட்டுவிட்டாரா?

“சுகாஷ் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பேசுவது மாவீரர் நாள் நிகழ்வில் தேசியத்தலைவர் உரையாற்றுவதைப் போல் தன்னைக் காட்ட முனைவது அடுத்த கோமாளித்தனம்” எனக் குறிப்பிடும் பஷீர் காக்கா சுகாஷ் கூறிய விடயத்தைப் புரிய முடியாது அரசியல் காழ்ப்புணர்வில் திரித்துக் கூறுபவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு கிடக்கும் மூத்த போராளியாகவா இருக்கிறார்? என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

“தேசியத் தலைவர் பொது எதிரிகள் பற்றியே மாவீரர் நாள் நிகழ்வில் சுட்டிக்காட்டியிருப்பார். சுகாஷின் உரை இலக்குத் தவறி தமிழ்த்தரப்பை நோக்கியது” என்று குறிப்பிடும் பஷீர் காக்கா பொது எதிரிகளை விடத் துரோகிகள் ஆபத்தானவர்கள் என்ற தலைவரின் சித்தாந்தத்தை மறந்து விடுமளவுக்கு சென்றுவிட்டாரா?

“சுகாஷ் பரபரப்புக்காக எதையும் சொல்வார். 13ஆவது திருத்தத்திற்கு எதிராகவும் ஒற்றை ஆட்சியை எதிர்த்துமே திலீபன் உண்ணா நோன்பினை மேற்கொண்டார் என்றும் கண்டுபிடித்தார். நவம்பர் மாதம்-14 ஆம் திகதி 1987இல் தான் 13 ஆவது திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேறியது. திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தது செப்டம்பர் 15 ஆம் திகதி” என்றும் பஷீர் காக்கா குறிப்பிட்டார்.

தியாக தீபத்தின் வீரச்சாவின் பின்னர் கொண்டுவந்த 13 ஆம் திருத்தச் சட்டம் தமிழருக்கான தீர்வைத் தந்து விட்டதா?

தியாக தீபத்தின் 5 அம்ச கோரிக்கைகளில் உள்ளடக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட்டதா? புதிதாகப் பொலிஸ் நிலையங்கள் மட்டுமல்லாமல் மேலதிகமாக இராணுவ முகாம்கள், ஒட்டுக் குழுக்களுக்கான முகாம்கள் திறக்கப்படவில்லையா?

தியாகதீபம் உயிர் நீத்த பின்னர் இப்போது வரை ஒற்றையாட்சியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

அல்லது தியாக தீபம் திலீபனுக்கு 13 ஆம் திருத்தம் சட்டமாக்கப்படும் என்று தெரிந்திருந்தால் உண்ணாநோன்பு இருந்து மரணித்திருக்க மாட்டார் என்று பஷீர் காக்கா நிறுவ முற்படுகிறாரா?

13 ஆம் திருத்தம் நிறைவேறிய பின் தேசிய தலைவர் விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்தமையையும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தியாகங்களையும் தவறு எனப் பஷீர் காக்கா நிறுவ முயல்கிறாரா? என்ற கேள்வியைப்பஷீர் காக்காவிடமே முன்வைக்கின்றோம்.

ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையே தமிழ் மக்களுக்கான தீர்வாகத் திணிக்க முற்படும் தரப்புகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரு மூத்த போராளி தான் போராடிய இலக்கை மறந்து துணைபோகிறாரா? என்றும் சந்தேகம் எழுகிறது. உன்னதப் போராட்டத்துக்கும், தியாகங்களுக்கும் உண்மையாகப் பயணம் செய்வதே தியாகங்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும் எனப் பஷீர் காக்காவிடம் விநயமாகக் கேட்டுக் கொள்கிறோம்.

இதுதவிரத் தியாக தீபம் நினைவேந்தலைத் திட்டமிட்டுக் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் முன்னரே தீட்டப்பட்ட சதி தொடர்பான குரல் பதிவுகளும், சதி தொடர்பான தொடர்பான வீடியோ ஆதாரங்கள் இருந்தும் சதிகாரருக்கு வெள்ளையடிக்க முயலும் பஷீர் காக்காவின் அறிக்கையின் நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

“பிரிவினைக்கு எதிராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்தவர்கள் அங்கு இனப் படுகொலையாளிகளை ‘கௌரவ’ (Honourable) எனப் பெயருக்கு முன்னால் விழித்து உரையாற்றுபவர்கள் தமக்குப் பிடிக்காதவர்களை அரசின் உளவாளிகள் எனக் குற்றஞ்சாட்டுவது கோமாளித்தனமானது” எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை குறித்து பஷீர் காக்கா குறிப்பிட்டுள்ளமையே கோமாளித்தனமானதாகும்.

தனியரசு கேட்டுப் போராடிய தலைவரால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் வெற்றிக்காகப் போராளிகளையும் தலைவர் ஈடுபடுத்தி இருந்தார். தேர்தலில் வென்ற உறுப்பினர்கள் பிரிவினைக்கு எதிராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுதான் ஒற்றையாட்சி நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்திருந்தார்கள். அப்படியாயின் புலிகள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார்கள் என்று பஷீர் காக்கா சொல்ல வருகிறாரா? தனிநாட்டுக்காகப் போராடிய போராளிகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியமை மூலம் புலிகள் ஒற்றையாட்சியை ஆதரித்தனர் என்று பஷீர் காக்கா சொல்ல வருகிறாரா?

பிரிவினைக்கு எதிராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு பாராளுமன்ற சம்பிரதாயங்களின் படி ‘கெளரவ’ என்று விழித்து உரையாற்றியிருந்த பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் “கெளரவ” என்னும் அடைமொழியால் அழைக்கப்பட்ட மாமனிதர்களான ரவிராஜ், சிவநேசன், ஜோசப் பரராஜசிங்கம் போன்றோருக்கு தேசியத் தலைவரால் ‘மாமனிதர்’ கெளரவம் வழங்கப்பட்டதைப் பஷீர் காக்கா தவறு என நிறுவ முற்படுகிறாரா?

தியாகி திலீபனின் அகிம்சை வழியிலான போராட்டத்தில் அவர் இலங்கை- இந்திய அரசுகளிடம் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளும் இன்னமும் நிறைவோறமல் இருக்கின்றன. இந்நிலையில் அவரை நினைவுகொள்ளும் நினைவெழுச்சி நாட்கள் வெறுமனே ஒரு சடங்காகக் கழிந்து செல்லாமல் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாட்களாகவே அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்

இவ்விடயத்தில் உடன்படும் தரப்புக்களுடன் இணைந்து செயற்பட நாம் எப்போதுமே தயாராக இருக்கிறோம். இதனைத் தவிர்த்துத் தியாகி திலீபனின் அரசியற் கோரிக்கைகளை பற்றிய சரியான விளக்கமில்லாமலும், அவை பற்றிய அக்கறையில்லாமலும் நிகழ்வுகளைக் குழப்ப முற்படுபவர்களாலேயே இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுகின்றன என்பதனை மூத்த போராளியான பஷீர் காக்கா விளங்கிக் கொள்ள மறுப்பது எங்களுக்கு வியப்பையும், கவலையையும் தருகிறது.

ஈழ விடுதலைப் போராட்டம் சொற்களைவிட செயல்களுக்கே முக்கியத்துவமளித்தது. அதேவேளை, வெளிப்படுத்திய ஒவ்வொரு சொற்களும் அர்த்தம் நிறைந்ததாக விளங்கியது. எமது வீர மரபானது உயிர் இழப்புக்களால் உண்டான துயரினால் அழுவதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட எந்த இலட்சியத்திற்காக ஒரு உயிர் ஆகுதியாகியதோ அந்த இலட்சியத்தை அடைவதற்கு உறுதிபூணும் நிகழ்வாகவே ஒவ்வொரு வீரச்சாவும், அதனைத் தொடந்த நிகழ்வுகளும் அமைந்தன.

ஆதலால்தான் கண்ணீர் அஞ்சலி என்றும், துக்க தினம் என்றும் இருந்த வரலாற்றை மாற்றி ஒவ்வொரு மாவீரனுக்கும் பின்னால் இருந்த வீர வரலாற்றையும், அவர்கள் தமது இதயத்தில் சுமந்த இலட்சியத்தையும் மிடுக்கோடு கூறும் புதிய வரலாற்றை ஈழவிடுதலைப் போராட்டம் பிரசவித்தது. அதன் அங்கமாகவே ‘மாவீரர் நினைவு எழுச்சி நாள்’, ‘தியாக தீபம் நினைவு எழுச்சி நாள்’ என்ற சொற்பதங்கள் உருவானது. அழுவதோடு நின்றுவிடாமல் எமது அழுகைக்கு காரணமான அரசியலையும், அந்த அழுகையை நிறுத்துவதற்கான அரசியலையும் பேசி வலிகளிருந்து வலிமை பெறும் வரலாறு உருவாக்கப்பட்டது. அந்த வரலாற்றைத் தொடர்வதென்பது தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்தும்.

“தான் அவமதிக்கப்பட்ட போது ஏற்பட்ட கோபத்தினாலும், என் மீது கொண்ட அன்பினாலும் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் சில கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டமை துரதிஷ்டவசமானது” என்று குறிப்பிட்டுள்ள பஷீர் காக்கா இனப் படுகொலையாளிகளான மகிந்த ராஜபக்சவுடனும், கோட்டபாய ராஜபக்சவுடனும், தியாகி திலீபனை அவதூறாகப் பேசி வரும் டக்ளஸ் தேவானந்தாவுடனும் சேர்ந்து மிகவும் அயோக்கியத்தனமான அரசியல் செய்பவர்கள் தொடர்பாக எழுந்துள்ள பாசம் ஆச்சரியமானது.

ஊடக பலம் கொண்டும், ஏனைய எத்தகைய அழுத்தங்கள் மூலம் சிதைக்க முயன்றாலும் எமது நேர்மையான கொள்கையோடு என்றும் பயணிப்போம் என உன்னத மறவர்களின் தியாகங்களின் மீது சபதம் எடுக்கின்றோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி)

RELATED ARTICLES

Most Popular