Friday, February 3, 2023
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்இந்துக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த கோமாதா

இந்துக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த கோமாதா

கோமாதா என்று போற்றப்படுகின்ற பசுமாடுகளைப் பேணுகின்ற வகையிலே உலகளாவிய இந்துக்களால் தைப் பொங்கலுக்கு மறுதினம் பட்டிப் பொங்கல் நிகழ்வு வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தான் இன்றையதினம் பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது.

சூரிய பகவானுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாகவும், இந்துக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்ததுமான ஆவினத்திற்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது.

மாடுகளின்றி விவசாயம் இந்த மண்ணில் நிலைக்க முடியாது. எனவே,மாடுகள் மீது மக்களுக்கு நன்றி உணர்வு இருக்க வேண்டும் என்பதற்காகவும், உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் எமது கலாசாரத்தில் மாடுகளைக் கொண்டாடும் பட்டிப் பொங்கல் விழாவை எமது முன்னோர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

இந் நாளில் காளைகள் மற்றும் பசுக்கள் வசிக்கும் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டுப் பின்னர் மாடுகளைக் குளிப்பாட்டிச் சுத்தம் செய்து அவற்றின் கொம்புகளில் வர்ணம் பூசி அவற்றிற்கு விபூதி, சந்தனம் குங்குமம் வைத்து மலர்மாலைகள் அணிவித்து வழிபடுவார்கள். அதுமாத்திரமன்றி உழவுக்கு உதவும் கருவிகளையும் சுத்தம் செய்து வழிபடுவார்கள்.

ஒவ்வொரு இந்துக்களின் வீடுகளிலும் பசுமாடு அவசியம் இருக்க வேண்டும். பசுமாடு மஹாலட்சுமியின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைகின்ற இடமாக கோமாதா திகழ்கிறாள்.

சைவசமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவனின் வாகனமாகப் பசு காணப்படும் நிலையில் கோமாதா என்று போற்றி வணங்குகிறார்கள். அதுமாத்திரமன்றி ஆலயங்களில் கோமாதாவுக்குப் பூசை நடாத்துவதையும் இந்துக்கள் வழமையாகக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக வீடுகள் குடிபோவதற்கு முதல்நாள் வீட்டில் பசுமாட்டைக் கொண்டு சென்று கட்டுவார்கள்.

இந்துக்களின் பஞ்ச கெளவியங்களாக விளங்கும் புனிதப் பொருட்களும் பசுமாட்டிலிருந்து தான் உருவாகின்றன. மனிதனின் நிறை உணவுகளில் ஒன்றாகக் காணப்படும் பாலைப் பசு எமக்கு உவந்தளிக்கிறாள். அதுமாத்திரமன்றி சிவசின்னம் என்று சொல்லப்படுகின்ற விபூதி பசுவினுடைய கோமயத்திலிருந்து(சாணம் ) தான் பெறப்படுகின்றது.

இந்துக்களின் விசேட தினங்கள், விரத நாட்களின் போதும், சுப காரியங்களின் போதும் பசுவின் சாணம் முக்கிய இடம்பெறுகிறது. குறிப்பாகப் பிள்ளையார் பிடிப்பதற்கும். வீட்டு முற்றத்தைப் புனிதப் படுத்துவதற்கும் பசுவின் சாணம் பயன்படுத்தப்படுகிறது. அதுமாத்திரமன்றிப் பூமிக்கு வரும் நச்சுக் கதிர்களை எதிர்த்து அனுப்பக் கூடிய ஆற்றல் கோமாதாவின் சாணத்திற்கு இருப்பதாக இன்றைய நவீன விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள் .

வீட்டில் மாடுகள் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்பது எம் முன்னோர்களின் நம்பிக்கை. காலையில் பசுமாட்டில் விழித்தால் அன்றையநாள் சுபமாகச் சகல சித்திகளும் கிடைக்குமென்று கூறுவார்கள். இதனால், அன்றைய காலத்தில் கிராமங்களில் மாடில்லாத வீடுகளே கிடையாது எனலாம்.

எனவே, கோமாதாவின் பெருமைகளை நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து போற்றி வணங்க வேண்டும். பட்டிப் பொங்கல் நாளில் மாத்திரமன்றிக் கோமாதாவை என்றென்றும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது இந்துக்களாகிய எம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.

(கட்டுரையாக்கம்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular