ஆந்திராவின் நெல்லூர் பர்வத ரெட்டி- ஜோதி தம்பதிக்கு ரோஷித் ரெட்டி என்ற மகன் உள்ளார். இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் டெவலப்பராக வேலை செய்கிறார்.
திருப்பதி நாயுடு பேட்டை சீனிவாஸ் ரெட்டி- சுனிதா தம்பதிக்கு ரிஷிதா என்ற மகள் உள்ளார், அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்து வருகிறார்.
ரோஷித் ரெட்டி- ரிஷிதா இருவரும் அமெரிக்காவில் வசிக்கையில் நட்பு ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்து மே 22 ஆம் தேதி திருமண தேதியைக் குறித்து அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டனர்.
திருமணம் அமெரிக்காவில் நடைபெற இருந்தநிலையில் பெற்றோருக்கு கடைசி நேரத்தில் விசா கிடைக்காமல் போனது.
அடுத்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணத்தை நடத்த முடிவு எடுத்து நாயுடு பேட்டை பாகுபலி சினிமா தியேட்டரை வாடகைக்கு எடுத்து தியேட்டரை திருமண மண்டபம் போல் அலங்கரித்தனர்.
அந்த தியேட்டரில் வீடியோ கான்பரன்ஸ் திருமணம் திரையிடப்பட்டது. திருமணத்தை பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும் திருமணத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு உறவினர்கள் மொய் மற்றும் அன்பளிப்புகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கல்யாண விருந்தானது ஹோட்டலில் வழங்கப்பட்டுள்ளது.