வடக்கு மாகாணத்துக்கான அனைத்துப் புகையிரதசேவைகளும் தற்காலிக இடைநிறுத்தம்! (Photo)

வடக்கு மாகாணத்துக்கான அனைத்துப் புகையிரதசேவைகளும் நாளை திங்கட்கிழமை(15.11.2021) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வேத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிரதான ரயில் பாதையிலான புகையிரதப் போக்குவரத்து வியாங்கொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களப் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை ரயில் நிலையங்களுக்கு இடையே மழைவெள்ளம் காரணமாக ரயில் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்ட நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு- காங்கேசன்துறை இடையே நாளை மூன்று ரயில் சேவைகள் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி ரயில் பாதையைச் சீர்செய்யப் பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பணி நிறைவடையும் வரை பிரதான பாதையிலான புகையிரத சேவைகள் கொழும்புக் கோட்டையிலிருந்து வியாங்கொடை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி)